/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறையில் உள்ள நான்கு பேரிடம் வனத்துறை விசாரணை
/
சிறையில் உள்ள நான்கு பேரிடம் வனத்துறை விசாரணை
ADDED : பிப் 21, 2025 10:44 PM
கூடலுார்; கூடலுார் அருகே வனவிலங்கு வேட்டையின் போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்களில், 4 பேரிடம் வனவிலங்கு வேட்டை தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
கூடலுார் தேவர்சோலை பகுதியை சேர்ந்த ஜெம்ஷித்,37, பேருராட்சி இளைஞர் காங்., தலைவராக இருந்தார். இவர், கடந்த 25ம், தேதி அதிகாலை காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாக கூறி, அவரின் உடலை சிலர், கூடலுார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
தேவர்சோலை போலீசார், வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், 'ஜெம்ஷித் உட்பட, 5 பேர், 24ம் இரவு வன விலங்கு வேட்டைக்கு சென்ற போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெம்ஷித் உயிரிழந்ததும்; மேலும், ஒன்பது பேரை அழைத்து அவர் உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்,' என்பதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து, வனவிலங்கு வேட்டைக்கு சென்ற நவசாத், 35, ஜாபர்அலி,43, ஐதர்அலி,59, சதிஷ், 37, மற்றும் அவர்களுக்கு உதவிய, 9 பேரை பேரை போலீசார் கைது செய்தனர்.
அனைவரும், கூடலுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கூடலுார் வன அலுவலர் உத்தரவுப்படி, அப்பகுதியில் வன விலங்கு வேட்டைக்கு சென்றது தொடர்பாக, நவசாத், ஜாபர்அலி, ஐதர்அலி, சதிஷ் ஆகிய 4 பேர் மீது, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார்.
தொடர்ந்து, கூடலுார் கோர்ட்டின் உத்தரவு பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு பேரையும் 'கஸ்டடி' எடுத்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின், கூடலுார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, நீதிபதி உத்தரவுப்படி மீண்டும் அவர்களை சிறையில் அடைத்தனர்.