/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி, குன்னுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்; வழி நெடுக பக்தர்கள் ஆரவாரம்
/
ஊட்டி, குன்னுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்; வழி நெடுக பக்தர்கள் ஆரவாரம்
ஊட்டி, குன்னுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்; வழி நெடுக பக்தர்கள் ஆரவாரம்
ஊட்டி, குன்னுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்; வழி நெடுக பக்தர்கள் ஆரவாரம்
ADDED : செப் 11, 2024 10:14 PM
ஊட்டி : ஊட்டியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட, 147 விநாயகர் சிலைகள் காமராஜ் சாகர் அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த, 7 ம் தேதி கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட முழுவதும், 518 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் பூஜை செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர். பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட, 147 விநாயகர் சிலைகளை வாகனங்களில் எடுத்து வரும் ஊர்வலம், ஊட்டி காந்தள் பகுதியில் துவக்கப்பட்டு, தேவாங்கர் திருமண மண்டபத்துக்கு வந்தது.
தொடர்ந்து, ஊட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த பொது கூட்டத்தில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். தொடர்ந்து, விசர்ஜன ஊர்வலத்தை அவர் துவக்கி வைத்தார்.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, ஹிந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அணையில் கரைப்பு
மேளதாளம் முழங்க வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மார்க்கெட், மெயின் பஜார், மின்வாரிய ரவுண்டானா வரை, 'ஓம்காளி; ஜெய்காளி' உட்பட பல்வேறு கோஷங்களுடன் சென்றது.
தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன், ஊட்டி அருகே காமராஜர் சாகர் அணைக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. திரளான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 147 விநாயகர் சிலைகள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், படகில் கொண்டு செல்லப்பட்டு, அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஊட்டியில் ஊர்வலம் நடந்ததால், முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
குன்னுார்
குன்னுாரின் பல்வேறு இடங்களிலும் இந்து முன்னணி சார்பில், 74 பெரிய சிலைகள் உட்பட 101 விநாயகர் சிலைகள் கடந்த, 7 ம் தேதி விசர்ஜனத்துக்காக பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்டன. அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. சிம்ஸ்பூங்காவில் துவங்கிய ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், கர்னல் (ஓய்வு) சுரேஷ் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
செண்டை மேளம் முழங்க, விநாயகர் சிலைகள், பெட்போர்டு, மவுன்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. ஊர்வலத்தில், 'கோவில்களில் இருந்து இந்து அறநிலைய துறை வெளியேற வேண்டும் ; பாரத் மாதா கி ஜே,' என்பன உட்பட பல்வேறு கோஷம் எழுப்பப்பட்டது. பக்தர்கள் சாலைகளில் மலர் துாவி நடனமாடினர். தொடர்ந்து, குன்னுார் லாஸ் நீர் வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. மாவட்ட எஸ்.பி., நிஷா தலைமையில், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

