/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை வழித்தடத்தில் எரிக்கப்படும் குப்பை பொதுமக்கள் மற்றும் வன விலங்குகள் பாதிப்பு
/
யானை வழித்தடத்தில் எரிக்கப்படும் குப்பை பொதுமக்கள் மற்றும் வன விலங்குகள் பாதிப்பு
யானை வழித்தடத்தில் எரிக்கப்படும் குப்பை பொதுமக்கள் மற்றும் வன விலங்குகள் பாதிப்பு
யானை வழித்தடத்தில் எரிக்கப்படும் குப்பை பொதுமக்கள் மற்றும் வன விலங்குகள் பாதிப்பு
ADDED : பிப் 24, 2025 10:06 PM

பந்தலுார்,; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் பகுதியை ஒட்டிய, வனப்பகுதியில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கள் நெலாக்கோட்டை சாலையோர வனப்பகுதியில் கொட்டி வந்தனர். இதனால் வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டு, கழிவுகளை உட்கொள்ள காட்டுப்பன்றிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் வந்தன.
இதனை தவிர்க்க வேறு இடம் இதுவரை கிடைக்காத நிலையில், ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களால் சேகரிக்கப்படும் குப்பை, அந்தந்த பகுதி சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.
மேலும், ஊராட்சியின் பெரும்பாலான பகுதிகளில், சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும் நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள சாலையோர வனத்தில் மீண்டும் கொட்டப்பட்டு வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனம் என்பதால், குப்பை கழிவுகளை உட்கொள்ள இரவு நேரங்களில் வனவிலங்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள குப்பைகளை, தினசரி எரிப்பதால் இந்தப்பகுதி கடும் துர்நாற்றம் வீசும் புகைமண்டலமாக மாறி வருகிறது. யானைகள் சாலையை கடந்து செல்லும் பகுதியில் குப்பை எரிப்பதால், யானைகள் வழித்தடம் மாறி கிராமத்தில் புகுந்து விடுகின்றன.
இப்பகுதி, கேரளா மாநிலம் வயநாடு செல்லும் முக்கிய சாலையாக உள்ள நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழியாக வந்து செல்லும் சுற்றுலா பயணிகள், மாணவர்கள் நச்சு தன்மை கொண்ட காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் பலரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து, அந்த இடத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்,' என்றனர்.