/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொக்காபுரம் கோவில் வளாகத்தில் குவிந்த குப்பை; சோலுார் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்

ADDED : மார் 12, 2025 10:29 PM
கூடலுார்; முதுமலை மசினகுடி, பொக்காபுரம் கோவில் திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் குவிந்த குப்பைகளை, சோலுார் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முதுமலை, மசினகுடி அருகே உள்ள, அருள்மிகு பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, 7ம் தேதி துவங்கி, 11ம் தேதி நிறைவு பெற்றது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, ஊட்டி மற்றும் கூடலுாரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவில் வளாகத்துக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். கோவிலில் முக்கிய நிகழ்வான, தேர் ஊர்வலம், 10ம் தேதி இரவு நடந்தது.
நேற்று முன்தினம், காலை மாவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது. விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று சோலுார் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்சத் தலைமையில், 65 துாய்மை பணியாளர்கள், கோவில் வளாகத்தில் குவிந்த குப்பைகளை அகற்றி துாய்மை படுத்தினர்.
செயல் அலுவலர் ஹர்ஷத் கூறுகையில், ''கோவில் வளாகத்தில் அகற்றப்படும் குப்பைகளை, மட்கும் குப்பை, மட்கா குப்பை என, தனியாக பிரிக்கப்பட்டு, மட்கும் குப்பைகளை அப்பகுதியில் இயற்கை உரம் தயாரித்து வருபவரிடம் கொடுக்கப்பட்டது. மட்கா குப்பைகள் தனியாக பிரித்து எடுத்து செல்லப்பட்டது,'' என்றார்.