/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய 'டயாலிசிஸ்' மைய கட்டுமான பணிக்கு பூமி பூஜை
/
புதிய 'டயாலிசிஸ்' மைய கட்டுமான பணிக்கு பூமி பூஜை
ADDED : பிப் 27, 2025 03:22 AM
கோத்தகிரி,: கோத்தகிரி அரசு மருத்துவமனையில், புதிதாக டயாலிசிஸ் மையம் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது.
கோத்தகிரி அரசு மருத்துவமனை சமீபத்தில் மேம்படுத்தப்பட்டு பல்வேறு நோய்களுக்கு நவீன உபகரணங்களுடன், தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர்.
இந்த மருத்துவமனையில், டயாலிசிஸ் வசதி இல்லாமல் இருந்த நிலையில், ஊட்டி அல்லது கோவை அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதற்காக, கூடுதல் செலவினம் தேவைப்படுவதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், 'கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டயாலிசில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில்,  ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,000 ஆயிரம் சதுர அடியில்,12 மெஷின்கள் வைக்கும் வகையில், டயாலிசிஸ் மையம் அமைக்க, ரோட்டரி சங்கம் முடிவெடுத்து, முதற்கட்டமாக, ஐந்து மெஷின்கள் வைக்கும் கட்டுமான பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
குன்னுார் சப்- கலெக்டர் சங்கீதா பூஜையை துவக்கி வைத்து பேசுகையில், ''கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. ஏழை எளிய மக்கள் பயன்பெற பெரும் உதவியாக அமையும்.
கட்டட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு டயாலிசிஸ் மையம் திறக்கப்படும். மக்கள் பயன்பெறும் வகையில்,  மருத்துவ தேவைக்காக, உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், அரசு செய்து தர தயாராக உள்ளது,'' என்றார்.
நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நாகபுஷ்பராணி, இணை இயக்குனர் ராஜசேகரன், கோத்தகிரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் சிவக்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி ராமு, தேவராஜ் கமலா சீராளன், நஞ்சன், ஜோகி மற்றும் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

