/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி பாதிப்பு; தென் மாநிலங்களில் விற்பனை; விலை அதிகரிப்பு

ADDED : ஆக 15, 2024 11:15 PM
குன்னுார் : வட மாநிலங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால், தேயிலை உற்பத்தி பாதித்து, தென் மாநிலங்களில் தேயிலை விற்பனையும்; விலையும் உயர்ந்தது.
குன்னுார் தேயிலை ஏல மையம்; 'டீசர்வ்' மையங்களில், நீலகிரி தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது. கோவை மற்றும் கேரள மாநிலம் கொச்சி ஏல மையங்களில் தென் மாநிலங்களின் தேயிலை, ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டின், 32வது ஏலத்தில் தேயிலை துாள் விற்பனை அதிகரித்ததுடன், சராசரி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதில், குன்னுார் ஏல மையத்தில், 22.46 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 20.96 லட்சம் கிலோ விற்பனையாகி, சராசரி விலை கிலோ, 110.10 ரூபாய் என உயர்ந்தது. கொச்சி மையத்தில், 9.17 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 8.42 லட்சம் கிலோ விற்பனையாகி, சராசரி விலை, 145.68 ரூபாய் என அதிகபட்சமாக இருந்தது.
கோவை மையத்தில், 4.53 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 4.44 லட்சம் கிலோ விற்பனையாகி, 117.48 ரூபாய் என இருந்தது. 'டீசர்வ்' ஏலத்தில், 2.07 லட்சம் கிலோ வந்ததில், 2.05 லட்சம் கிலோ விற்பனையாகி, சராசரி விலை கிலோவுக்கு, 95.65 ரூபாய் என மிகவும் குறைவாக இருந்தது.
வர்த்தகர்கள் கூறுகையில், 'வடமாநிலங்களில் சமீப வாரங்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் தேயிலை உற்பத்தி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மழை காலங்களில் டீ நுகர்வும் அதிகரிக்கிறது. இதனால், தென் மாநிலங்களில் தேயிலை துாளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விற்பனையும் விலையும் அதிகரித்தது,' என்றனர்.