/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 23, 2024 01:47 AM

மேட்டுப்பாளையம்: மழை காரணமாக, மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு, ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன.
இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகளில் 50 சதவீதம் கேரளாவுக்கு செல்கிறது. மீதி 50 சதவீதம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஊட்டி உருளைக்கிழங்களுக்கு என தனி ருசி உள்ளதால், மற்ற மாநிலங்களின் கிழங்கை விட மவுஸ் எப்போதும் அதிகம். கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் உருளைக்கிழங்கு விவசாயம் பாதித்துள்ளது.
பல இடங்களில், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உருளைகிழங்கு அழுகியது. மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இது குறித்து உருளைக்கிழங்கு மண்டியில் உள்ள கடை உரிமையாளர் பாபு கூறியதாவது:
தினமும் 10 முதல் 15 லோடு வந்த நிலையில் தற்போது 3 முதல் 4 லோடுகள் தான் வருகின்றன. இதனால் ஊட்டி கிழங்குகள் விலை உயர்ந்துள்ளது. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி கிழங்கு, ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆகிறது. இதற்கு முன்னாள் ரூ.1,800 முதல் 2,000 வரை விற்பனையானது. குஜராத் கிழங்குகள் ரூ.1,500, கோலார் கிழங்குகள் ரூ.1,900 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தூர், ஆக்ரா, குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து வரும் உருளைக்கிழங்குகளின் வரத்தும் குறைந்துள்ளது. 25 லோடு வரவேண்டிய இடத்தில் 15 லோடுகள் தான் வருகின்றன. லோடுகள் குறைந்தாலும் விலையில் பெரிய மாற்றம் இல்லை.
வடமாநிலங்களில் இருந்து லோடு அதிகரித்தால், ஊட்டி கிழங்குகளின் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

