/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்
/
நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : ஏப் 30, 2024 01:34 AM

கூடலுார்;நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி உள்ளிட்ட, 13 பிரிவுகளில், 'நீலகிரி வரையாடு' கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், நம் மாநில விலங்கான வரையாடும் கணிசமாக உள்ளன.
புல்வெளிகளை அழித்தல், வெளிநாட்டு களை செடிகள் ஆக்கிரமிப்பு, வனத் தீ போன்ற காரணங்களால் இதன் வாழ்விடங்கள் சுருங்கி விட்டன. அழிவின் விளிம்பில் உள்ள இதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக, மாநில அரசு, நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை, 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில், 7 புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டிய ஆறு வனக்கோட்டங்களில், வரையாடுகள் கணக்கெடுப்பு பணியை நேற்று முதல் வனத்துறை துவக்கி உள்ளது.
அதில், நீலகிரி மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா, கூடலுார் வனக்கோட்டம், நீலகிரி வனக்கோட்டத்தில் நடுவட்டம், குந்தா கோரகுந்தாவில், 13 பிரிவுகளில் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இப்பணியில் மூத்த ஆராய்ச்சியாளர்கள், வன ஊழியர்கள், 60 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில், 'வரையாடுகள் நேரடி எண்ணிக்கை கணக்கிடுவது; அதில் குட்டிகள், ஆண் மற்றும் பெண் பாலினம், வயது குறித்த விவரங்களைக் கண்டறிந்து 'டேட்டா' சீட்டில் பதிவு செய்வது; வரையாடுகளுக்கு கால், தொடையில் கட்டி தென்பட்டால், அதனை கவனித்து பதிவு செய்வது; அவைகளின் எச்சத்தையும் சேகரிப்பது,' போன்ற பணிகள் இடம்பெறும். மேலும், வரையாடுகளை 'ட்ரோன்' கேமரா வாயிலாக கண்காணித்து அதன், புகைப்படம்; வீடியோ பதிவு செய்யும் பணியும் நடக்கிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'நீலகிரி வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு பதிவுகளின், அடிப்படையில் வரையாடுகள் எண்ணிக்கை குறித்து கணக்கிட்டு அறிவிக்கப்படும்,' என்றனர்.

