/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசுப் பள்ளிகளில் துாய்மைப்படுத்தும் பணி தீவிரம்
/
அரசுப் பள்ளிகளில் துாய்மைப்படுத்தும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 05, 2024 09:49 PM
பெ.நா.பாளையம் : அந்தந்த பகுதியில் உள்ளாட்சி சுகாதார பணியாளர்களின் உதவியோடு, அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோடை விடுமுறைக்கு பின், இம்மாதம், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளியில் வகுப்பறைகள், மைதானம் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் தளவாட பொருட்கள் உள்ள அறைகள் தூய்மைப்படுத்த வேண்டும். காலாவதியான ஆய்வக பொருள்களை முறைப்படி நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்பாட்டுக்கான குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளின் உட்புறம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, மாணவர்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுரைகள், குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளில், பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.