/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமுகையில் வடமாநில வேட்டை கும்பல் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து சிறப்பு குழு கண்காணிப்பு
/
சிறுமுகையில் வடமாநில வேட்டை கும்பல் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து சிறப்பு குழு கண்காணிப்பு
சிறுமுகையில் வடமாநில வேட்டை கும்பல் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து சிறப்பு குழு கண்காணிப்பு
சிறுமுகையில் வடமாநில வேட்டை கும்பல் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து சிறப்பு குழு கண்காணிப்பு
ADDED : ஆக 28, 2024 02:04 AM

மேட்டுப்பாளையம்;சிறுமுகை வனப்பகுதிகளில், வடமாநில வேட்டை கும்பல்கள் நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே 2 புலிகள், ஒரு காட்டு பன்றி கொல்லப்பட்டன. இது தொடர்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், காட்டுப்பன்றிக்கு விஷம் வைத்ததை ஒப்புக்கொண்டனர். புலியை வேட்டையாடி புலியின் நகம், தோல்களை விற்பனை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பதால், இவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு குழு
இச்சம்பவத்தை தொடர்ந்து சிறுமுகை வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமுகை வனச்சரகம் பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதி என்பதால், இங்கு வனவிலங்குகளின் வருகையும் அதிகமாக இருக்கும்.
இதுகுறித்து, சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், நீலகிரியில் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சிறுமுகை வனப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்.
வேட்டை கும்பல்கள், அந்நியர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழு சிறுமுகை வனப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளான ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக்குட்டை, குஞ்சப்பனை, உலியூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர வனப்பகுதியில் இரவு நேர ரோந்தையும் அதிகரித்துள்ளோம், என்றார்.
சிறுமுகையில் உள்ள உலியூர் வனப்பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகில் உள்ளதால் இங்கு புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அண்மையில் உலியூர் பகுதியில் புலிகள் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக 9 வயது பெண் புலி ஒன்று உயிரிழந்தது. அப்போது இருந்தே புலிகள் மீதான கண்காணிப்பு சிறுமுகை வனப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டை கும்பல்களின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் அதே வேளையில் அவுட்டுகாய்கள், நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாகவும், வனத்துறையினர் தாங்கள் சந்தேகிக்கும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் வனவிலங்குகளை வேட்டையாட யாராவது அவுட்டுகாய்கள், நாட்டு வெடிகுண்டுகளை கேட்டனரா எனவும் விசாரணை நடத்தப்படுகிறது.
7 மயில்கள் கொலை
புலிகளுக்கு விஷம் வைத்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று முன் தினம் காரமடை குமரன் குன்று பகுதியில் உணவில் விஷம் வைத்து 7 மயில்கள் கொல்லப்பட்டுள்ளன.
இதுகுறித்து காரமடை வனத்துறையினர் குழு அமைத்து விஷம் வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.