/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு வழக்கில் இன்டர்போல் விசாரணை
/
கோடநாடு வழக்கில் இன்டர்போல் விசாரணை
UPDATED : ஜூன் 21, 2024 10:49 PM
ADDED : ஜூன் 21, 2024 08:25 PM
ஊட்டி:'' கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, 'இன்டர்போல்' போலீசார் உதவியுடன் நடந்து வருகிறது,'' என, தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
இங்கு கடந்த, 2017, ஏப்., 23ம் தேதி இரவு, 11 பேர் கொண்ட கும்பல் நுழைந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதுாரை கொலை செய்தது, ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.
இந்த கொலை சம்பவத்துக்கு தலைமை வகித்த சேலம் ஆத்துாரை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். சம்பவத்தில் ஈடுபட்ட சையான் மற்றும் வாழையார் மனோஜ் உட்பட, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி சோலுார்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு, தற்போது ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதில், சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், எஸ்டேட் மேலாளர் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுகுட்டி உட்பட, 167 பேரிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், ஊட்டி கோர்டில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட ஜித்தின் ராய், சி.பி.சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி., முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராயினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் அடுத்த மாதம், 26ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அரசு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில், ''கோடநாடு கொலை நடந்த ஓரிரு நாட்களில், கனகராஜின் மொபைல் போனிற்கு, ஏழு எண்ணில் துவங்கும் வெளிநாட்டு மொபைல்போனில் இருந்து, ஐந்து முறை அழைப்பு வந்துள்ளது.
'யார் அழைத்தார்கள்; எதற்காக அழைத்தார்கள்,' என்பது குறித்து, 'இன்டர்போல்' போலீசார் உதவியுடன் விசாரணை நடந்து வருவதாக, நீதிபதியிடம் தெரிவித்தோம்.
மேலும், வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்வது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தோம். இதனை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம், 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.