/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் அழிந்து வரும் தேசிய விலங்குகளை... பாதுகாப்பது அவசியம்!கூடுதல் கவனம் செலுத்துமா மாநில வனத்துறை...?
/
மலையில் அழிந்து வரும் தேசிய விலங்குகளை... பாதுகாப்பது அவசியம்!கூடுதல் கவனம் செலுத்துமா மாநில வனத்துறை...?
மலையில் அழிந்து வரும் தேசிய விலங்குகளை... பாதுகாப்பது அவசியம்!கூடுதல் கவனம் செலுத்துமா மாநில வனத்துறை...?
மலையில் அழிந்து வரும் தேசிய விலங்குகளை... பாதுகாப்பது அவசியம்!கூடுதல் கவனம் செலுத்துமா மாநில வனத்துறை...?
ADDED : ஆக 27, 2024 02:29 AM

பந்தலுார்:நீலகிரி மாவட்டத்தில் அழிந்து வரும் தேசிய விலங்குகளை பாதுகாப்பதில் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய விலங்கான புலியை பாதுகாக்க பல்வேறு செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த, 1969ல் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, 1970ல் வனவிலங்கு வேட்டைக்கு தடை; 1972ல் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
1973 ஏப்., ஒன்றாம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புலிகள் பாதுகாப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். நாட்டின் காடுகளில் வாழும் புலிகளை பாதுகாப்பதற்காக முதலில், 9- புலிகள் காப்பகங்கள், துவக்கப்பட்டன.
தற்போது, 54 புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. உயிரினங்களின் உணவு சங்கிலியில் புலிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது. புலிகள் வாழும் பகுதி அடர்த்தியான மற்றும் பசுமை நிறைந்த வனப்பகுதியை கொண்டுள்ளதால், அங்கு புலிகள் மட்டுமின்றி பிற வனவிலங்குகளும் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாகும்.
மனித- விலங்கு மோதல்
புலிகள் வனத்திலிருந்து வெளியேறி, மக்கள் வாழ்விடங்களுக்கு வரும்போது, மனித- -வனவிலங்கு மோதல் உருவாகி, பின்னர் புலிகள் சுட்டுக் கொல்லப்படுகிறது அல்லது வனவிலங்கு பூங்காவிற்கு பிடித்து செல்லப்படுகிறது. அதையும் மீறி, பல இடங்களில் மக்களால் கொல்லப்படுவதும் தொடர்கிறது.
இதனைத் தவிர்க்க, புலிகளின் வாழ்விடங்கள் காப்பாற்றவும், புலிகள் சரணாலயங்களை ஒட்டி உள்ள காடுகளின் நிலப்பரப்பு அதிகரித்து, அந்த பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அல்லது கட்டுமானங்கள் வராமல் இருக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
தென் மாநிலங்களில் நீலகிரியில் அதிகம்
தமிழகத்தில், முதுமலை, ஆனைமலை, களக்காடு -முண்டந்துறை, மேகமலை, சத்தியமங்கலம் ஆகிய புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், முதுமலை புலிகள் காப்பகம், தமிழக, கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளின் எல்லையில் உள்ளதால், முதுமலையில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, சமீபகாலமாக புலிகளின் இறப்பும் இங்கு அதிகரித்து வருகிறது.
கடந்த, 20ம் தேதி பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்தில் புலிகளின் உடல் பாகங்களை கடத்தும் நோக்கில், இரு புலிகளை விஷம் வைத்து கொன்ற, வட மாநில தொழிலாளர்கள், சூரியநாத் பராக், அமன் கொயாலா, சுபித்நன்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், 'எஸ்டேட் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்டு உள்ளார்களா என்பது குறித்து, வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்,' என, வன உயிரின ஆர்வலர்கள் சிலர், மாநில முதல்வருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.
உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் கூறுகையில், ''கடந்த, 2012 முதல் நடப்பாண்டு கடந்த, 20ம் தேதி வரை, நாட்டில், 1,334 புலிகள் உயிரிழந்து உள்ளது. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நீலகிரி காடுகளில் பல்வேறு காரணங்களால், 12 புலிகள் உயிரிழந்து உள்ளன. அதில், ஐந்து புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டவை. இத்தகைய நிலை தொடராமல் இருக்க, வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.