/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலய ஊர்வலம்
/
செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலய ஊர்வலம்
ADDED : ஆக 12, 2024 02:19 AM

ஊட்டி:ஊட்டியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி இயக்கம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி ஞாயிற்று கிழமை தினத்தில் கஞ்சி கலய ஊர்வலம் நடக்கிறது. நடப்பாண்டு கஞ்சி கலய ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடந்தது.
அதில், முளைப்பாரி, அக்னி சட்டி, கும்மியாட்டம், கோலாட்டம், படுகரின மக்களின் நடனம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. ஊர்வலம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள பாறை முனீஸ்வரர் கோவில் அருகில் துவங்கியது.
தொடர்ந்து, மெயின் பஜார், ஐந்துலாந்தர், கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி அரசு கலைக்கல்லுாரி அருகேயுள்ள ஆதிபராசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தில் முடிந்தது.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை எனப்படும் சிவப்பு நிற உடைகள் அணிந்து பங்கேற்றனர். அப்போது, ஓம்சக்தி, பராசக்தி, என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டவாறு சென்றனர்.
ஊர்வலத்தின் முடிவில், பிரார்த்தனை நடந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட ஆதிபராசக்தி குழு நிர்வாகத்தினர்; அனைத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.