/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கனமழையால் நிரம்பி வழியும் கவுசிகா நதி தடுப்பணைகள்
/
கனமழையால் நிரம்பி வழியும் கவுசிகா நதி தடுப்பணைகள்
ADDED : மே 24, 2024 11:02 PM

கருமத்தம்பட்டி : அரசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், கவுசிகா நதியில் தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன.
சூலுார் வட்டாரத்துக்கு உட்பட்ட அரசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தினமும் மாலையில் துவங்கும் மழை நள்ளிரவு வரை நீடிப்பதால், அரசூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்கள், குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. பொத்தியாம்பாளையம், பொன்னாண்டாம்பாளையம், ஆலாம்பாளையம், சோளக்காட்டுபாளையம், மோப்பிரிபாளையம் உள்ளிட்ட ஊர்களில் பெய்த கனமழை காரணமாக மழை பெருக்கெடுத்தது.
வழியோர நீர்நிலைகள் நிறைந்து, மோப்பிரிபாளையம் பேரூராட்சி வழியாக செல்லும் கவுசிகா நதிக்கு மழைநீர் சென்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு அதில் உள்ள தடுப்பணைகள்நிறைந்து வழிந்தன. இதனால், திருப்பூர் மாவட்டம் தெக்கலுார் வரையில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''கவுசிகா நதியில் தடுப்பணைகள் கட்டிய பின் இப்போதுதான் நிரம்பி வழிகின்றன. நதியில் உள்ள உறைகிணறுகளுக்கு நீர் சென்றுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றனர்.

