ADDED : ஜூன் 26, 2024 09:17 PM
பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாட்டில் காணப்பட்ட கன்னிவெடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலுார் அருகே, கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு தலப்புலா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மக்கிமலை, கம்பமலை, கொட்டியூர், அம்பாயத்தோடு, பால்சுரம் பகுதிகளில் நக்சல் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
சமீப காலமாக கேரள மாநிலம் தண்டர்போல்ட் அதிரடிப்படை போலீசார், நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதுடன், ஒரு சில நக்சல்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மக்கிமலை அருகே கொடகாடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில், போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு மண் அகற்றப்பட்டு குழிகளில் கன்னிவெடி புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அப்பகுதிக்கு வெடி மருந்து தடுப்பு பிரிவினர் வந்து, கன்னிவெடிகளை செயலிழக்க செய்து அவற்றை மீட்டனர்.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த பகுதியில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தாக்குதல் நடத்தும் நோக்கிலும் நக்சல்கள் கன்னிவெடிகளை புதைத்து வைத்திருக்க வாய்ப்புள்ளது.
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,' என்றார். இதை தொடர்ந்து, நீலகிரி எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.