/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் நெடுஞ்சாலை துறை நிலம் ஆக்கிரமிப்பு
/
எல்லையில் நெடுஞ்சாலை துறை நிலம் ஆக்கிரமிப்பு
ADDED : மே 29, 2024 10:13 PM

பந்தலுார்:
பந்தலுார் அருகே தாளூர் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லை பகுதியாக, பந்தலூர் அருகே தாளூர் சோதனை சாவடி உள்ளது. அதில், சாலையின் ஒரு பகுதியில், தமிழக பகுதியாகவும் அதன் எதிர்ப்பகுதியில் கேரளா பகுதியாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதி, தனியார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் கட்டி செயல்பட்டு வருகிறது.
ஆனால், இதன் எதிரே உள்ள கேரளா மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலை யோர ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை வாகனங்கள் நிறுத்த ஏதுவாக அமைத்து உள்ளனர்.
'பார்க்கிங்' பிரச்னை அதிகம்
இந்நிலையில், தமிழக எல்லைக்குள், இரு மாநில அரசு பஸ் மற்றும் டாக்சி வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதில், ஒரு சில கடைகளை 'குடி'மகன்கள் தங்கள் பார் ஆக மாற்றி வரும் நிலையில், கல்லுாரிக்கு வரும் மாணவிகள் மற்றும் இரு மாநில பயணிகள், வாகனங்களுக்கு காத்திருக்க முடியாத நிலையில் உருவாகிறது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை கையகப்படுத்தி கட்டடங்களை அகற்றுமாறு இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மட்டும் செய்துவிட்டு தங்கள் பணியை நிறுத்திவிடுகின்றனர்.
இங்குள்ள மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் செயல்பட ஏதுவாக, இதனை ஒட்டி கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை திறந்து செயல்படுத்த ஆக்கிரமிப்பாளர்கள் தடையாக உள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்,' என்றனர்.
கூடலுார் ஆர்.டி.ஓ. செந்தில்குமார் கூறுகையில், ''இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.