/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் வீணாவதை உள்ளாட்சி நிர்வாகம் தடுக்கணும்
/
குடிநீர் வீணாவதை உள்ளாட்சி நிர்வாகம் தடுக்கணும்
ADDED : ஏப் 27, 2024 01:03 AM

ஊட்டி;'மாவட்டத்தில் குடிநீர் வீணாவதை உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து தடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது
நீலகிரியில், 11 பேரூராட்சிகள், 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், உள்ள கிராமங்களுக்கு குடிநீர், அந்தந்த உள்ளாட்சிகளில் உள்ள நீராதாரத்திலிருந்து அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் சேமிக்கப்படுகிறது.
அங்கிருந்து பொது குழாய் மற்றும் குடிநீர் இணைப்பு பெற்ற குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மாவட்ட முழுவதும் உள்ளாட்சிகளின் கீழ், 500க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளது.
கடந்தாண்டு பருவமழை பொய்தது. நடப்பாண்டிலும், ஏப்., மாதம் இறுதி வரை கோடை மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் உள்ள அணை, குளம், குட்டைகள் அனைத்தும் வற்றியது. கூட்டு குடிநீர் திட்ட நீராதாரமும் வற்றியுள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மக்கள் ஊற்று நீரை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகர்பகுதிகளில் ஒருவாரம், இரு வாரம் என்ற கணக்கில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனால், உள்ளாட்சி அமைப்பின் கீழ் உள்ள கிராம மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதாவது, வாகனங்கள் கழுவ கூடாது; குடிநீர் தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீரை வீணடிக்க கூடாது; பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். உள்ளிட்ட அறிவுரைகள் பொதுமக்களுக்கு அரசின் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தொட்டிகளில் இருந்து தண்ணீர் வீணாவது அதிகரித்து வருகிறது. 'இதை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை,' என, புகார் எழுந்துள்ளது. எனவே, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டியது அவசியம்.

