/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்
/
நீலகிரியில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்
ADDED : பிப் 27, 2025 03:25 AM
ஊட்டி: நீலகிரியில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஏற்ற நாளாக மகா சிவராத்திரி நாளில், சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டின், மஹா சிவராத்திரியை ஒட்டி ஊட்டி காந்தளில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் விழாவில், நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை, மஹா பிரதோஷ பூஜை, தீபாராதனை, சுவாமி திருக்கோவில் திருவுலா நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை, 7:00 மணி முதல் கால சந்தி பூஜை நடந்தது. மதியம் 2:00 மணிளவில் விநாயகர் வழிபாடு, வேள்வி பூஜை, யாக பூஜை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பேரூர் மருதாசல அடிகளார் தலைமையில், மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின் பக்தி பஜனை பாடல்கள் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
* ஊட்டியில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் மஹா சிவராத்திரி ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு லிங்க தரிசனம் நடந்தது. இந்த சிறப்பு தரிசனம் அடுத்த மாதம், 10 ம் தேதி வரை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
மேலும், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில், பாக்கோரை, மணிக்கல், முள்ளிகூர் உள்ளிட்ட கிராமங்களில் மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடந்தது.
கூடலுார் கூடலுார் கல்லிங்கரை சிவன் கோவிலில், சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பள்ளி எழுச்சி நிகழ்ச்சியும், 4:30 மணிக்கு நடைதிறப்பு தொடர்ந்து அபிஷேகம், கணபதி ஹோமம், உஷ பூஜை நடந்தது. 11:00 மணிக்கு மதிய பூஜை நடந்தது. மதியம், 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை நிகழ்ச்சியும், இரவு தேர் ஊர்வலம், தொடர்ந்து அத்தாழ பூஜை, ருத்ராபிஷேகம் நிகழ்ச்சிகள் நடந்தது.
* தேவர்சோலை ஸ்ரீ சங்கரன்கோவில், சிவராத்திரி திருவிழா அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 6:00 மணிக்கு பிரபாத பூஜை, 7:50 மணிக்கு விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும், 7:55 மணிக்கு பறை நிறப்புதல், 8:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை திருத்தேர் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில், 'ரோபோடிக்' யானை பங்கேற்று பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
*கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, முனீஸ்வரர் கோவிலில், நேற்று காலை கணபதி ஹோமத்துடன் சிவராத்திரி பூஜை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை தேர் ஊர்வலம் நடந்தது.
*ஓவேலி பார்வட் சிவன் கோவில், மண்வயல் மாதேஸ்வரன் கோவில், நந்தட்டி சிவன் கோவில், நம்பாலக்கோட்டை சிவன்மலை கோவிலில் நேற்று, சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடந்தது.
குன்னுார்
குன்னுார் கம்பிச்சோலை முனீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் மகா சிவராத்திரி விழா துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இன்று (27ம் தேதி) முனீஸ்வரர், கருப்பராயர், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, மாலை, 4:00 மணிக்கு சிலம்பம் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி விளக்கு பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. மார்ச், 1ல் கங்கைக்கு சென்று ஐயனின் கத்தி பாலிக்கும் நிகழ்ச்சி, தீர்த்தக்குடம், பால்குடம் ஊர்வலம், கிடா வெட்டு பூஜை, தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை கம்பிச்சோலை, காந்திநகர், இந்திரா நகர், குறிஞ்சி நகர் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
* குன்னுார் விநாயகர் கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி நேற்று மாலை, 4:00 மணியளவில் முதல் காலயாக பூஜை துவங்கியது. தொடர்ந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பஜனை பாடல்கள் பாடி வழிபட்டனர். தொடர்ந்து பிரசாதம் வினியோகம் நடந்தது.
இதேபோல, கோத்தகிரி கெச்சிகட்டி, கொணவக்கரை சிவன் கோவில் மற்றும் பந்தலுார் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோவில்களில் சிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடந்தது.