ADDED : ஜூன் 08, 2026 07:20 PM
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவை கட்டமைத்த,மெக் ஐவரின், 150 வது நினைவு தினத்தையொட்டி அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தாவரவியல் பூங்காவை, 1848-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வில்லியம் கிரகம் மெக்ஐவர் என்ற கட்டட கலை வல்லுனர் தொடங்கி வைத்தார். 19 ஆண்டுகளுக்கு பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்தது. பின்னர், 1867-ம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த பூங்காவில் பல்வேறு நாடுகளின், 50 வகையான மரங்களும், 250 விதமான மலர் செடிகளும் உள்ளன. பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர், 1876-ம் ஆண்டு ஜூன், 8ம் தேதி இறந்தார். அவரது நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவரது 150-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. ஊட்டி ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் அமைந்துள்ள அவரது கல்லறைக்கு கலெக்டர் லட்சுமி பவ்யா, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் நவநீதா, உதவி இயக்குனர் பெபிதா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
