/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஊராட்சிகள் பிரிப்பு தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்': ஒன்றிய கவுன்சிலர்கள் போர்க்கொடி
/
'ஊராட்சிகள் பிரிப்பு தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்': ஒன்றிய கவுன்சிலர்கள் போர்க்கொடி
'ஊராட்சிகள் பிரிப்பு தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்': ஒன்றிய கவுன்சிலர்கள் போர்க்கொடி
'ஊராட்சிகள் பிரிப்பு தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்': ஒன்றிய கவுன்சிலர்கள் போர்க்கொடி
ADDED : ஜூன் 26, 2024 10:02 PM
அன்னூர் : பெரிய ஊராட்சிகளை பிரிப்பது குறித்த தீர்மானம் பொதுமக்களிடமும், கிராம சபையிலும் கருத்து கேட்காமல் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் பெரிய ஊராட்சிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தில் ஊராட்சிகளை இரண்டாகப் பிரிக்க ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக அனுப்பும்படி கூறியது.
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. இதில் மசக்கவுண்டன் செட்டிபாளையம், குன்னத்தூர், காரே கவுண்டன் பாளையம், ஒட்டர் பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பி இருந்தது. நான்கு ஊராட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: ஊராட்சிகளை பிரிக்கும் போது அந்த கிராமத்தில் உள்ளவர்கள் எந்த பகுதியில் சேருவது என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு தந்திருக்க வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. கிராமசபை கூட்டமும் நடத்தவில்லை.
ஊராட்சி தலைவரும் வார்டு உறுப்பினர்களும் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர். உடனடியாக அனுப்பிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். பொது மக்களிடம் கருத்து கேட்ட பின்பே ஊராட்சிகளை பிரிக்க வேண்டும். எந்த கிராமம் எந்த ஊராட்சி உடன் இணைய வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். ஜூன் 7ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன.
ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலில் இருக்கும் போதே ஊராட்சியில் ஊராட்சிகளை பிரிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றியது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானதாகும். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய சேர்மன் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசிக்காமல் ஊராட்சிகள் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நாளை ஒருங்கிணைப்பு கூட்டம்
பெரிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துதல், பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துதல், நகராட்சியுடன் அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பது உள்ளிட்டவைகளை செயல்படுத்த, நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறையும் மக்கள் தொகை அடிப்படையில் பெரிய ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக, இரண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக ஊராட்சி தலைவர்களிடம், ஊராட்சியின் நிலைப்பாடு குறித்து கடிதம் பெற்றுள்ளனர். இதையடுத்து, பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிப்பது, அல்லது அருகில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சியுடன் இணைப்பது, எந்தெந்த ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் பிரிப்பது என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு செய்ய, கோவை கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில், வரும், 28ம்தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்கிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோர் பங்குபெற உள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் இறுதி முடிவில் தான், எந்தெந்த ஊராட்சிகள் பிரிக்கப்படும், பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும், எந்தெந்த ஊராட்சிகள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்பது தெரிய வரும்.