/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேடியோ வானியல் மையத்தில் தேசிய அறிவியல் தினம்
/
ரேடியோ வானியல் மையத்தில் தேசிய அறிவியல் தினம்
ADDED : பிப் 28, 2025 10:31 PM

ஊட்டி,; ஊட்டி முத்தோரை ரேடியோ வானியல் மையத்தில், தேசிய அறிவியல் தினத்தில் அறிவியல் மாதிரி செயல்திறன் போட்டி நடந்தது.
இங்கு, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலை நோக்கிகளில் ஒன்றாக, ஊட்டி ரேடியோ தொலைநோக்கி இயங்குகிறது. இந்த தொலைநோக்கி, பல முக்கியமான வானியல் மற்றும் வானியற்பியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மையம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பதுடன், பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இங்கு நடந்த தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரி மாணவர்களுக்கு அறிவியல் மாதிரி செயல்திறன் போட்டி நடந்தது. அதில், 70 பள்ளி, கல்லுாரியில் இருந்து, 140 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கு, கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இஸ்ரோ விண்வெளி அறிவியல் திட்ட துணை இயக்குனர் டாக்டர் கிரிஷ் மாணவர் மத்தியில் பேசியதாவது:
கூர்ந்து கவனித்தல்; வினா எழுப்புதல்; அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகிய மூன்று தான், அறிவியல் ஆராய்ச்சியில் சாதனை படைக்க உதவும். உலகம் தோன்றிய காலம் முதல் வானமும், கடலும் நீல நிறமாக இருந்ததன் காரணம் குறித்து, சர்.சி.வி.,ராமன் தனக்குத்தானே கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் ஆராய்ச்சி மேற்கொண்டதில், 'ஒளி சிதறல்கள் தான், வானமும், கடலும் நீல நிறமாக காட்சி அளிக்க காரணம்,' என்பதை அறிந்தார். அதற்காகவே, அவருக்கு முதன் முதலில் நோபல் பரிசு கிடைத்தது. ராமனின் விளைவு கண்டுபிடிப்பை போற்றும் வகையில், ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் நிகழ்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியில், அறிவியல் மாதிரி செயல் திறன் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.