/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை கவரும் ஊசிமலை காட்சி முனை
/
சுற்றுலா பயணிகளை கவரும் ஊசிமலை காட்சி முனை
ADDED : மே 26, 2024 11:29 PM

கூடலுார்;கூடலுார் ஊசிமலை காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளை, வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரையாடு உருவங்கள் கவர்ந்து வருகின்றன.
ஊட்டி, குன்னுார் பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார் வழியாக அதிக அளவில் வந்து செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஊட்டி-கூடலுார் தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இச்சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள், கூடலுாரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் கற்பூர மரங்கள் நிறைந்த, ஊசிமலை பகுதியில் வாகனங்களை நிறுத்தி, ஊசிமலை காட்சி முனைக்கு சென்று வருவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். காட்சி முனையில் நின்றால் காணப்படும், பாறைகள் நிறைந்த சரிவான மலைப்பகுதி, கூடலுார் நகரின் இயற்கை, தவலை மலை காட்சி, முதுமலை மற்றும் நடுவட்டம் வனப்பகுதி வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது, வனத்துறை சார்பில் மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ள நீலகிரி வரையாடு உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதனை 'போட்டோ' எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெளி மாநில சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'ஊசிமலையை சுற்றியுள்ள மலைகள் மற்றும் இயற்கை வனப் பகுதியும், மிதமான காலநிலையும், சாலையை ஒட்டி வானுயர்ந்து காணப்படும் கற்பூர மரங்களும் கண்களுக்கு மனதுக்கும் இதமாக உள்ளது,' என்றனர்.

