ADDED : மே 14, 2026 12:20 PM
பாலக்காடு: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து, பாலக்காட்டில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் (எஸ்.எப்.ஐ.,) போராட்டம் நடத்தினர்.
எஸ்.எப்.ஐ., மாவட்டக் குழு சார்பில், நேற்று பாலக்காடு தலைமை தபால் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். விக்டோரியா கல்லுாரி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி, தபால் அலுவலகத்தை அடைந்த போது, அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை கலைக்க போலீசார், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வற்புறுத்துவது பெரிய ஊழல் என்றும், இது மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறை என்றும், பல மாதங்களாக கடுமையாக படித்து தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை, மத்திய அரசு கேள்விக்குறியாக்கி வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
போராட்டத்தை, எஸ்.எப்.ஐ., மாநில செயலக உறுப்பினர் விபின் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் முகமது ஷாதுலி, மாவட்ட செயலாளர் அபிஷேக் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் விஷ்ணுப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
