/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிக்க தண்ணீர் இல்லை: பழங்குடியினர் போராட்டம்
/
குடிக்க தண்ணீர் இல்லை: பழங்குடியினர் போராட்டம்
ADDED : ஏப் 18, 2024 05:06 AM

பந்தலுார் : பந்தலுார் கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால், பழங்குடியின மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கையுன்னி பி.ஆர்.எப். பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 35க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், குடிநீர் வினியோகம் செய்வதற்காக கிராமத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்ட கிணறு, பாழடைந்து உள்ளதால் இந்த கிணற்று நீரை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.
மேலும், கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், குழாய்கள் திருடப்பட்டதால் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது.
பணம் தந்தால் குடிநீர்
கிராமத்தை ஒட்டி ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றிலிருந்து, பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், 'கிராம மக்கள் இணைந்து தினசரி, 50 ரூபாய் வழங்கினால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும்,' என, குடிநீர் உதவியாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பழங்குடியின மக்கள் பணம் வழங்கி வந்த நிலையில், தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் திறப்பதால், பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால், குடிநீர் உதவியாளர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, கிராமத்திற்கு குடிநீர் விநியோகத்தை நிறுத்தி உள்ளார். இதுகுறித்து குடிநீர் உதவியாளரிடம் பழங்குடியின பெண்கள் கேட்டபோது அவர்களை, தரக்குறைவாக பேசியுள்ளார்.
கண்டு கொள்ளாத ஊராட்சி
ஊராட்சிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று காலை காலி குடங்களுடன் பழங்குடியினர் மக்கள், கிராமத்தை ஒட்டிய சாலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் லில்லிக்கு தகவல் தெரிவித்த நிலையில், அந்த வழியாக காரில் சென்ற அவர், 'தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும்,' என, கூறி பழங்குடி மக்களை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.
தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட பழங்குடியின மக்கள் முடிவு செய்தனர். இது குறித்து, பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர், ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதனால்,மக்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கூறுகையில், 'இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யாமல், அச்சுறுத்தி வரும் குடிநீர் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்,' என்றனர்.

