/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை சீகூர் யானை வழித்தட விடுதிகள் 15 நாட்களில் இடித்து அகற்ற 'நோட்டீஸ்'
/
முதுமலை சீகூர் யானை வழித்தட விடுதிகள் 15 நாட்களில் இடித்து அகற்ற 'நோட்டீஸ்'
முதுமலை சீகூர் யானை வழித்தட விடுதிகள் 15 நாட்களில் இடித்து அகற்ற 'நோட்டீஸ்'
முதுமலை சீகூர் யானை வழித்தட விடுதிகள் 15 நாட்களில் இடித்து அகற்ற 'நோட்டீஸ்'
ADDED : ஆக 19, 2024 07:15 AM

கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடியை ஒட்டிய, சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2009ல் வக்கீல் யானை ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து, 2011ல், யானை வழித்தடங்களில் உள்ள அனுமதியில்லாத சுற்றுலா விடுதிகள்; ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்தது.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, 2018 ஆக., 12ல் யானை வழித்தடங்களில் உள்ள, 39 தனியார் விடுதிகளுக்கு, மாவட்ட நிர்வாகம், 'சீல்' வைத்தது. வழித்தடத்தை மீட்கும் நடவடிக்கையாக, சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
அதற்காக, ஊட்டியில் தனி அலுவலகம் திறக்கப்பட்டது. அங்கு விடுதி உரிமையாளர்கள், உள்ளூர் மக்கள் தங்களுக்கு சொந்தமான இடம், கட்டடம் தொடர்பான ஆவணங்களுடன், தங்கள் கோரிக்கை விண்ணப்பங்களை அளித்தனர்.
இக்கமிட்டி, விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் அடிப்படையில், யானை வழித்தடங்களில் சீல் வைத்த கட்டடங்களை பலமுறை ஆய்வு செய்தது. தொடர்ந்து, யானை வழித்தடங்களில் அனுமதி இன்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றும்படி, அதன் உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டு 'நோட்டீஸ்' அளித்தது. இதுவரை கட்டடங்கள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில், சீகூர் யானை வழித்தடத்தில், தனியார் விடுதி கட்டடங்களை அகற்றி காலி செய்யும்படி, சோலுார் பேரூராட்சி, மசினகுடி உட்பட நான்கு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கட்டட உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, யானை வழித்தடங்கள் உள்ள தனியார் விடுதி கட்டடங்களை அகற்ற, அதன் உரிமையாளர்களுக்கு இரண்டாம் கட்ட 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் உரிமையாளர்கள் கட்டடங்களை அகற்ற வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.