/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரே ஒரு ஊரு; நிர்வாகம் நாலு; பிரச்னைக்கு கிடைக்கல தீர்வு பொன்னாண்டாம்பாளையம் மக்கள் அதிருப்தி
/
ஒரே ஒரு ஊரு; நிர்வாகம் நாலு; பிரச்னைக்கு கிடைக்கல தீர்வு பொன்னாண்டாம்பாளையம் மக்கள் அதிருப்தி
ஒரே ஒரு ஊரு; நிர்வாகம் நாலு; பிரச்னைக்கு கிடைக்கல தீர்வு பொன்னாண்டாம்பாளையம் மக்கள் அதிருப்தி
ஒரே ஒரு ஊரு; நிர்வாகம் நாலு; பிரச்னைக்கு கிடைக்கல தீர்வு பொன்னாண்டாம்பாளையம் மக்கள் அதிருப்தி
ADDED : ஆக 03, 2024 05:31 AM
சூலுார்: சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது பொன்னாண்டாம்பாளையம் கிராமம். தென்னம்பாளையம் - வாகராயம் பாளையம் ரோட்டில் உள்ள இக்கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த ஊரின் வடக்கு பகுதி மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு கீழும், கிழக்கு பகுதி கணியூர் ஊராட்சியின் கீழும், தெற்கு பகுதி அரசூர் ஊராட்சியின் கீழும் வருகிறது. மேற்கு பகுதி அன்னுார் தாலுகாவுக்கு உட்பட்ட நாரணாபுரம் ஊராட்சிக்கு கீழும் வருகிறது. மற்ற மூன்று பகுதிகள் சூலுார் தாலுகாவின் கீழ் உள்ளன. திசைக்கு ஒரு ஊராட்சி நிர்வாகம் இருப்பதால், ஒரு பகுதிக்கு கிடைக்கும் வசதிகள், மற்றொரு பகுதிக்கு கிடைப்பதில்லை.
வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு பெறுதல், சாலை மற்றும் சாக்கடை வசதி, அரசின் நலத்திட்ட உதவிகள், சுகாதார வசதி பெறுதல் உள்ளிட்ட பல வசதிகளை பெறுவதற்கு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரே ஒரு ஊருக்கு, இரண்டு எம்.பி.,க்கள், இரண்டு எம்.எல்.ஏ., க்கள், மூன்று ஊராட்சி தலைவர்கள், ஒரு பேரூராட்சி தலைவர் இருந்தும், 25 ஆண்டுகளாக, மக்கள் எழுப்பி வரும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டும் மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை.
இதுகுறித்து வார்டு உறுப்பினர் சிவக்குமார் கூறியதாவது: எங்கள் ஊரின் பெரும்பாலான மக்கள், கணியூர் ஊராட்சியுடன், கிராமத்தை இணைக்க வேண்டும், என, விரும்புகின்றனர்.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதன் பலனாக அதிகாரிகள் ஆய்வு, கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்தன. ஆனால், பல ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அதற்கும் பலன் இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் தீர்வு கிடைக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள வருவாய்த்துறை செயலரை சந்தித்து முறையிட உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து மக்கள் கூறுகையில்,' லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் பல முறை நடந்துள்ளது. ஆனால், எங்களுக்கான தீர்வை மட்டும் யாரும் கொடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் நினைத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். அவர்களும் முயற்சிக்கவில்லை. வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், தேர்தலை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை,' என்றனர்.