ADDED : ஏப் 29, 2024 11:20 PM
ஊட்டி;ஊட்டிக்கு, மே மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இங்கு 'பிளாஸ்டிக்' பொருட்கள் தடை உள்ள நிலையில், சீசன் காலங்களில் அதனை கட்டுப்படுத்துவது மாவட்ட நிர்வாகத்துக்கு சவாலாக உள்ளது. இதனை கண்காணிக்க சோதனை சாவடிகள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,களில் உள்ள தண்ணீர் மாதம் ஒரு முறை சுகாதாரத்துறை; மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் வடிகால் வாரியத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இங்கு சுற்றுலா பயணிகள் வாட்டர் ஏ.டி.எம்., களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள, 5 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தலாம்.
மாவட்ட கலெக்டர் கூறுகையில், 'ஊட்டியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சியை பொருத்தமட்டில், மே மாதம் இறுதிவரை சமாளிக்க கூடிய அளவுக்கு, அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.
ஒரு சில இடங்களில் மட்டும், வாரம் ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கப்படும் நிலை உள்ளது. அதுவும் கூடிய விரைவில் சரி செய்யப்படும். தவிர தேவைப்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது,' என்றார்.
