/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெல் விதைக்கும் பணி: விவசாயிகள் ஆர்வம்
/
நெல் விதைக்கும் பணி: விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 03, 2024 09:13 PM

கூடலுார் : கூடலுாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நெல் விவசாயிகள் விதை நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து, நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. வயல்களில் நெல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க துவங்கியுள்ளது.
இதை தொடர்ந்து, விவசாயிகள் வயல்களில் உழவு பணிகளை மேற்கொண்டு, விதை நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆடி மாதம், நாற்றுகள் பறித்து நடவும் பணிகளை துவங்க உள்ளனர்.
வயல்களில் விதைக்கப்பட்ட விதை நெல்லை பாதுகாக்க, விவசாயிகள் பகல் நேரம் முழுவதும் கண்காணித்து, சப்தம் மற்றும் சில்வர் தட்டில் ஓசை எழுப்பி பறவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலுாரில் அதிக அளவில் நெல் விவசாயம் செய்து வந்தாலும், அரசு உதவியும் கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல்விவசாயி முருகன் கூறுகையில்,''கூடலுாரில் பருவமழை காலத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், அரசின் சார்பில் நெல் விவசாயத்திற்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை.
இதனால், உற்பத்தி செலவை சமாளிக்க சிரமப்பட்டு வருகிறோம். நெல் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், உதவிகள் வழங்குவதுடன் நெல் விவசாயத்திற்கு தேவையான ஊழியர்களை, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து வழங்கி உதவ வேண்டும்,'' என்றார்.