/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்கா திட்டம் இடமாற்றம்: நாடுகாணியில் கடையடைப்பு
/
பூங்கா திட்டம் இடமாற்றம்: நாடுகாணியில் கடையடைப்பு
ADDED : மார் 10, 2025 11:51 PM

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், தேவாலா நாடுகாணியில், மத்திய அரசு அறிவித்த பூங்காவை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய சுற்றுலா துறையை, சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தும் நோக்கத்துடன், பிரதமர் மோடி கடந்த நவம்பரில், நாட்டின், 10 இடங்களில் புதிய பூங்காக்கள் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
தமிழகத்தில், மாமல்லபுரத்தில், 99.67 கோடி ரூபாய் செலவில், நந்தவனம் பாரம்பரிய பூங்கா மேம்பாடு செய்யவும், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தேவாலா பொன்னுார் பகுதியில், 70.23 கோடி ரூபாய் செலவில் தேவாலா மலர் பூங்கா அமைக்கவும், 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இந்நிலையில், பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், பூங்கா அமைப்பதற்கு போதிய இடம் இல்லை எனக்கூறி, இந்த திட்டத்தை, கள்ளிச்சால் பகுதியில், வருவாய்த் துறைக்கு சொந்தமான, 100 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'பொன்னுாரில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான, 200 ஏக்கர் நிலத்தை, 50 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு வழங்கியது.
தற்போது இந்த இடத்தை வனத்துறைக்கு மாற்றி, பிரதமர் அறிவித்த திட்டத்தை செயல்படுத்தாமல், இடத்தை மாற்றி உள்ளனர்' என்றனர்.
அரசின் இந்த செயலுக்கு நாடுகாணி மற்றும் பொன்னுார் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ., ஜெயசீலன் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஏற்கனவே மனு கொடுத்தனர்.
தீர்வு கிடைக்காத நிலையில், நேற்று நாடுகாணி முழுதும் கடைகள் அடைக்கப்பட்டு, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விரைவில் சட்டசபை தேர்தல் வரும் நிலையில், பூங்கா பிரச்னை கூடலுார் தொகுதியில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.