/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேஷன் பொருள் வாங்க ஐந்து கி.மீ., நடை பயணம் ஜமாபந்தியில் மக்கள் புகார்
/
ரேஷன் பொருள் வாங்க ஐந்து கி.மீ., நடை பயணம் ஜமாபந்தியில் மக்கள் புகார்
ரேஷன் பொருள் வாங்க ஐந்து கி.மீ., நடை பயணம் ஜமாபந்தியில் மக்கள் புகார்
ரேஷன் பொருள் வாங்க ஐந்து கி.மீ., நடை பயணம் ஜமாபந்தியில் மக்கள் புகார்
ADDED : ஜூன் 24, 2024 12:01 AM

அன்னுார்;'ரேஷன் பொருள் வாங்க ஐந்து கி.மீ., செல்ல வேண்டி உள்ளது,' என ஜமா பந்தியில் மக்கள் புகார் தெரிவித்தனர்.
அன்னுார் தாலுகா அலுவலகத்தில், இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடந்தது. துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுரேஷ் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
அன்னுார் வடக்கு உள்வட்டத்தைச் சேர்ந்த 11 ஊராட்சிகளில் இருந்து இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு, முதியோர் உதவித் தொகை, கலைஞரின் மகளிர் உரிமை திட்டம், ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு 400க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
அம்மா செட்டிபுதூர் மக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் வித்யா சுகுமார் அளித்த மனுவில்,' அம்மா செட்டிபுதூரில் உள்ள 150 ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் பொருள் வாங்க ஐந்து கி.மீ., தொலைவு உள்ள பசூர் செல்கின்றனர். அம்மாசெட்டிபுதூரில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்,' என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கஞ்சப்பள்ளி ஊராட்சி சார்பில் தலைவர் சித்ரா அளித்த மனுவில்,' ஊத்துப்பாளையத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும், 52 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா அளிக்க வேண்டும்.' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகலூர் ஊராட்சி தலைவர் நடராஜன் அளித்த மனுவில்,' முடுக்கன் துறையில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் 16 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூலூர் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தாசில்தார் தனசேகரன், தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அலுவலர்கள் கூறுகையில்,' இரு நாட்கள் நடந்த ஜமா பந்தியில், மொத்தம், 570 மனுக்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான மனுக்கள், வீட்டு மனை பட்டா கேட்டு வந்துள்ளன.
மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அந்தந்த துறைக்கு பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. ஜமா பந்தி நிறைவில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும்' என்றனர்.