/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி கிடைச்சாச்சு
/
குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி கிடைச்சாச்சு
ADDED : ஜூன் 12, 2024 10:28 PM
அன்னுார் : கோவை மாவட்டத்தில், நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 83 குளம், குட்டைகளில், விவசாயிகள் வண்டல் மண் மற்றும் மண் எடுக்க அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் அன்னுார் தாலுகாவில் 25 குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொண்டையம்பாளையம் குளம், அக்ரஹார சாமக்குளம், குன்னத்தூர் குளம் ஆகியவற்றில் மண் எடுக்கலாம்.
இத்துடன் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள அ.மேட்டுப்பாளையம், கெம்ப நாயக்கன் பாளையம், குரும்பபாளையம், கஞ்சப்பள்ளி, பசூர், பொகலூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம், குப்பே பாளையம், குன்னத்தூர் கணுவக்கரை ஆகிய ஊர்களில் 22 குளம், குட்டைகளில் வண்டல் மண் மற்றும் மண் எடுக்கலாம்.
இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில், 'விவசாய பணிக்காக நஞ்சை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு, அதிகபட்சமாக 75 கன மீட்டரும், புன்செய் நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 90 கன மீட்டரும் மண் எடுக்கலாம். மண் எடுக்க விரும்புவோர் ஊரக வளர்ச்சி துறை குளங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். நீர் வளத்துறை குளம் என்றால் செயற் பொறியாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குள் மண் எடுத்தவர்களுக்கு தற்போது அனுமதி இல்லை.
அனுமதி பெற்ற 20 நாட்களுக்குள் மண் எடுத்துக் கொள்ள வேண்டும்.' என்றனர்.