/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் காட்டு யானை பிரச்னை: கட்டுப்படுத்தினால் மக்களுக்கு நிம்மதி
/
தொடரும் காட்டு யானை பிரச்னை: கட்டுப்படுத்தினால் மக்களுக்கு நிம்மதி
தொடரும் காட்டு யானை பிரச்னை: கட்டுப்படுத்தினால் மக்களுக்கு நிம்மதி
தொடரும் காட்டு யானை பிரச்னை: கட்டுப்படுத்தினால் மக்களுக்கு நிம்மதி
ADDED : ஆக 09, 2024 01:44 AM

பந்தலுார்;'பந்தலுார் குந்தலாடி பகுதியில் தொடரும் காட்டுயானை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குந்தலாடி பகுதி அமைந்துள்ளது. இதனை ஒட்டி ஓர்கடவு, தானிமூலா, வாழவயல், பெக்கி உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூன்று யானைகள், இரவு, 7:00 மணிக்கு கிராமத்திற்குள் வருகின்றன. சாலை மற்றும் நடைபாதைகளில் உலா வரும் யானைகள், வீடுகள் முன்பாக உள்ள விவசாய பயிர்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த பகுதி விவசாயிகள் வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், யானைகளால் விவசாய பயிர்கள் முழுமையாக சேதமடைந்து, விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், வெளியிடங்களுக்கு சென்று வருபவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி -கல்லுாரி மாணவர்கள் இரவு, 7:00 மணிக்குள் வீடுகளுக்குள் வந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், அவசர தேவைகளுக்கு வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையில், இப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் சூழல் தொடர்கிறது. வனத்துறை ஊழியர்களுக்கு போதிய உபகரணங்கள் இல்லாமல் வரும் நிலையில், யானைகளை அவர்களால் வனத்திற்குள் துரத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், யானைகளால் அச்சமடைந்த மக்கள், கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கவுன்சிலர் ஜோஸ் குட்டி தலைமை வகித்தார்.
அதில், 'கிராமத்திற்குள் முகாமிடும் மூன்று யானைகளையும், கும்கி யானைகள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க விட்டால் பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டம் நடத்தப்படும். முதல் கட்டமாக வனச்சரகர் மற்றும் தாசில்தாருக்கு புகார் மனு அளிக்கப்படும்,' என, தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், பிரகாஷ், மணி, தேவராஜ், மூர்த்தி, துரை, விஸ்வநாதன், ஜிஷா உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.