/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
/
திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஆக 07, 2024 10:36 PM

கோத்தகிரி : கோத்தகிரி பஸ் நிலையத்தில், கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்க, போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து, கோவை உட்பட, சமவெளி பகுதிகளுக்கு ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க சென்று வருகின்றனர். தவிர, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
விடுமுறை முடிந்து, சமவெளியில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இங்குள்ள கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி, மொபைல் போன், பணத்தை திருடுவதற்காக, ஒரு கும்பல் பஸ் நிலையத்தில் சுற்றி வருகிறது. கடந்த சில நாட்களாக மொபைல் போன், பணம் திருட்டு சம்பவம் அதிகமாக நடந்துள்ளதால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்வதை தடுக்க, போக்குவரத்து எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பஸ் ஸ்டாண்ட் வந்து பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது, 'மொபைல்போன், பணம் உடமைகளை பத்திரமாக வைத்து கொள்வதுடன், சந்தேகப்படும் நபர்கள் குறித்து, போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்' என, அறிவுறுத்தினர்.