/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
/
தனியார் பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
ADDED : மே 28, 2024 12:19 AM

பாலக்காடு;பாலக்காடு ஒற்றைப்பாலத்தில், தனியார் பஸ் ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒற்றைப்பாலத்தில், பஸ் ஸ்டாண்டில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து ஒழுங்குமுறைக் குழுவால் 'பார்க்கிங்' சீர்திருத்தம் உருவாக்கப்பட்டது.
அதாவது, பஸ் ஸ்டாண்டில் நிறுத்தும் வாகனங்கள், ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்பது முக்கிய சீர்திருத்தமாகும்.
இதனால், விபத்து குறையாது, அதிகரிக்க தான் வாய்ப்பு உள்ளது என்றும், இந்த சீர்திருத்தம் பஸ் அட்டவணையை வெகுவாக பாதிக்கும் என்றும், பஸ் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, பஸ் உரிமையாளர்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர். மனுவின் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து, நேற்று காலை போக்குவரத்து சீர்திருத்த நடவடிக்கையை பின்பற்றாமல் பஸ்களை நிறுத்தி, தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக, தனியார் பஸ் உரிமையாளர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து, பஸ் ஊழியர்கள் காலை, 9:00 மணி முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.