/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை வீடு
/
நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை வீடு
ADDED : ஆக 15, 2024 11:15 PM
பந்தலுார் : வயநாடு மாவட்டத்தில், நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு புஞ்சிரிமட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பூஞ்சிரி மட்டம், முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டனர். அதில், வீடுகளை இழந்த, 587 குடும்பங்களை சேர்ந்த, 1,722 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வீடுகள் கட்டி தருவதற்கான முயற்சியில் அரசு நிர்வாகத்துடன் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தனி நபர்களும் கைகோர்த்துள்ளனர்.
பள்ளிகளில் முகாம்கள் செயல்பட்டு வரும் நிலையில், பள்ளிகள் செயல்பட வேண்டி உள்ளதால் இவர்களுக்கு வாடகை வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதில், வயநாடு பகுதியில் முட்டில், மேப்பாடி, வைத்திரி, அம்பலவயல் மற்றும் மூப்பை நாடு, கல்பெட்டா உள்ளிட்ட பகுதிகளில், உள்ள வீடுகளை வாடகைக்கு வழங்க விருப்பமுள்ளவர்கள், 'அரசிடம் அதற்கான விண்ணப்பம் வாயிலாக விருப்பம் தெரிவிக்கலாம்,' என, வயநாடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'இவர்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டி குடியமர்த்தும் வரை, மாதம், 6000 ரூபாய் வாடகை வழங்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் வாடகை வீடுகளில் குடியமர்த்தப்பட உள்ளனர்.
மேலும், முகாம்களில் தங்கி உள்ளவர்களில், 18 வயது நிரம்பியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 300 ரூபாய் வீதம், உதவித்தொகை வழங்கும் வகையில், முதல் கட்டமாக வைத்திரி தாசில்தாரரிடம் கேரள மாநில அரசு, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து வழங்கி உள்ளது.

