/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆக்கிரமிப்பு அகற்றிய ஆற்றோர பகுதியில் ஆபத்து பாதுகாப்பு தடுப்பு பணி அவசரம்
/
ஆக்கிரமிப்பு அகற்றிய ஆற்றோர பகுதியில் ஆபத்து பாதுகாப்பு தடுப்பு பணி அவசரம்
ஆக்கிரமிப்பு அகற்றிய ஆற்றோர பகுதியில் ஆபத்து பாதுகாப்பு தடுப்பு பணி அவசரம்
ஆக்கிரமிப்பு அகற்றிய ஆற்றோர பகுதியில் ஆபத்து பாதுகாப்பு தடுப்பு பணி அவசரம்
ADDED : ஆக 17, 2024 12:53 AM

குன்னுார்:'குன்னுாரில் ஆற்றோர பகுதியில் கடைகள் இடிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் ஆற்றோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, சில கடைகள் காலி செய்யப்பட்டதுடன் பல கடைகளை வருவாய்துறையினர் சார்பில் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே அரசியல் கட்சியினர் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்படாமல் இருந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டீக்கடையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தொடர்ந்து அருகில் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், 2வது முறையாக டீக்கடை மீண்டும் சரிந்தது. இதனையொட்டி பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிற கடைகளை காலி செய்து இடிக்க வருவாய் துறையினர் உத்தரவிட்டனர். இதன் பேரில், கடையின் உரிமையாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து பாதியில் விட்டு சென்றனர். தற்போது இந்த பகுதிகள் மிகவும் அபாயகரமாக உள்ள போதும் தடுப்பு நடவடிக்கைகளையும், அறிவிப்புபலகைகளையும் வருவாய்துறையினர் வைக்கவில்லை.
இதனால், மக்கள் அங்குள்ள அபாயத்தை தெரியாமல் அந்த பகுதியில் சென்று அமர்வது; இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது; மது அருந்துவது உட்பட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் நிற்பதால் இந்த பகுதி மீண்டும் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த பகுதியில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யும் போது தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறும் நிலையில், தற்காலிக பாதுகாப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்வது அவசியம்.