/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் ஆகாச பாலம் பகுதியில் சாலை சீரமைப்பு; கனரக வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
/
கூடலுார் ஆகாச பாலம் பகுதியில் சாலை சீரமைப்பு; கனரக வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
கூடலுார் ஆகாச பாலம் பகுதியில் சாலை சீரமைப்பு; கனரக வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
கூடலுார் ஆகாச பாலம் பகுதியில் சாலை சீரமைப்பு; கனரக வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
ADDED : ஆக 02, 2024 05:30 AM

கூடலுார் : கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, ஆகாச பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால், அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை தவிர்த்து, பிற கனரக வாகனங்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலுார், நடுவட்டம், முதுமலை, ஓவேலி, மசினகுடி பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கன மழையின் போது, ஆறுகளில் ஏற்படும் மழை வெள்ளம், குடியிருப்பு, விவசாய தோட்டங்களை சூழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அடிக்கடி சாலைகளில் உள்ள தரைபாலங்களை மழை வெள்ளத்தில் மூழ்குவதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
புதிய பாலம் கட்டும் பணி
முதுமலை, தெப்பக்காடு - மசினகுடி சாலையில், மாயாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால், வாகன போக்குவரத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான தரை பாலத்தை தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மாயாறு ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தில் அடிக்கடி தரைப்பாலம் மூழ்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மசினகுடி மக்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். புதிய பாலம் கட்டும் பணி, 2022ல் துங்கி இதுவரை பணிகள் முடிக்காததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏழு வீடுகளில் விரிசல்
மேல் கூடலுார் கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில், ஏழு வீடுகளில் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. அதில், வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்து உறவினர் வீட்டுக்களில் தங்கி உள்ளனர்.
இப்பகுதியில், 'மத்திய புவியியல் துறையினர் ஆய்வு செய்து தரும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுவரை ஆய்வு செய்து விரிசலுக்கான காரணம் குறித்து தெரிவிக்காததால், மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். பெரும் பாதிப்பு ஏற்படும் முன் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
மண்சரிவால் பாதிப்பு
இந்நிலையில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஆகாச பாலம் அருகே, சில நாட்களுக்கு முன் மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர், அதனை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில், மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால், நெடுஞ்சாலை துறையினர் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மழை தொடர்வதால் அவ்வப்போது பணிகளின் தொய்வு ஏற்படுகிறது. இதனால், வாகனங்கள் இயக்கவும் சிரமம் ஏற்படுகிறது.
கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு
இச்சாலையில் அத்தியாவசிய வாகனங்களை தவிர்த்து, பிற கனரக வாகனங்கள் இயக்க, தற்காலிக தடை விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் மூன்று நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட்டு, நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், நிலசரிவு, மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலையில் விழுந்து பாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வரவேண்டும்.
மேலும், கூடலுார் தேசிய நெடுஞ்சாலை ஆகாச பாலம் அருகே சாலை சீரமைப்பு பணி நடந்து வருவதால், இச்சாலையில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களை தவிர்த்து, பிற கனரக சரக்கு வாகனங்கள் ஒரு வாரத்துக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.