/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலி நகைகள் வைத்து ரூ.9 லட்சம் மோசடி : 3 பேர் கைது
/
போலி நகைகள் வைத்து ரூ.9 லட்சம் மோசடி : 3 பேர் கைது
போலி நகைகள் வைத்து ரூ.9 லட்சம் மோசடி : 3 பேர் கைது
போலி நகைகள் வைத்து ரூ.9 லட்சம் மோசடி : 3 பேர் கைது
ADDED : செப் 12, 2024 08:47 PM

ஊட்டி :வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து, 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; தலைமறைவான, 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பொதுத்துறை வங்கியான 'யூகோ' வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானவர்கள் கணக்கு வைத்து பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த அயூப், 35, மனைவி பரீன், 30, முகமது ஹபீஸ், 39, அவருடைய மனைவி ரேஷ்மா, 37, ஆகியோர், ஊட்டி யூகோ வங்கிக் கிளையில் கடந்த, 2023ம் ஆண்டு ஜன., 3 ம் தேதி, 261 கிராம் தங்க நகையை அடமானமாக வைத்து, 8.77 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளனர்.
இந்த நகைகளை யூகோ வங்கியில் நகை மதிப்பீட்டாளர்களாக பணியாற்றும் தங்காடு ஓரநள்ளியை சேர்ந்த சந்திரசேகரன், 58, குன்னுார் பெரிய உபதலையை சேர்ந்த வினோத், 46, ஆகியோர் மதிப்பீடு செய்து, தங்க நகைகள் அசல் என்று சான்றிதழ் வழங்கி உள்ளனர். தற்போது, அடகு வைத்த நகைகளுக்கு அசல் மற்றும் வட்டியுடன் சேர்ந்து, 9.26 லட்சம் ரூபாய் கட்ட வேண்டி இருந்தது.
3 பேர் கைது:
இந்நிலையில், யூகோ வங்கி தலைமையகத்தில் இருந்து கடந்த, மார்ச், 26ம் தேதி வருடாந்திர ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அயூப் உட்பட, 4 பேர் அடகு வைத்த நகைகள் போலி என்பது தெரியவந்தது. இந்த மோசடி சம்பவத்திற்கு நகை மதிப்பீட்டாளர்களான, சந்திரசேகரன், வினோத் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்தினர், ஊட்டி பி-1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறுகையில், ''போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட காந்தள் பகுதியை சேர்ந்த முகமது ஹபீஸ், நகை மதிப்பீட்டாளர்களான சந்திரசேகரன், வினோத் ஆகிய, 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறோம்,'' என்றார்.