/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உணவு வழங்கியதில் சர்ச்சை ;ஆர்.டி.ஓ., விசாரணை
/
உணவு வழங்கியதில் சர்ச்சை ;ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : மே 31, 2024 12:25 AM
குன்னுார்:குன்னுார் அம்மா உணவகத்தில் மூதாட்டிக்கு பிளாஸ்டிக் கவரில் உணவு வழங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குன்னுார் மவுண்ட் ரோட்டில் உள்ள வண்டி பேட்டை பகுதியில் அம்மா உணவகத்தில் பலரும் உணவு உட்கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இங்கு வந்த மூதாட்டி ஒருவருக்கு 'பிளாஸ்டிக்' கவரில் உணவு வழங்கப்பட்டது. அங்கு வந்த சமூக ஆர்வலர் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில் அங்கு வைத்து இருந்ததுடன், பிளாஸ்டிக் கவருடன் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்டுள்ளார். இது தொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியிடப் பட்டது.
தொடர்ந்து, அம்மா உணவகத்தை குன்னுார், ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் தாசில்தார் கனிசுந்தரம் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் கூறுகையில்,''பணம் கொடுத்து உணவு வாங்கிய வாடிக்கையாளருக்கு உரிய சேவையை வழங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. ஆனால், அவருக்கு உரிய சேவை வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்மா உணவக மகளிர் குழு தலைவி, நகராட்சி வருவாய் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட மூதாட்டி ஆகிய மூவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.