/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...! இன்று தேசிய விளையாட்டு தினம்
/
ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...! இன்று தேசிய விளையாட்டு தினம்
ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...! இன்று தேசிய விளையாட்டு தினம்
ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...! இன்று தேசிய விளையாட்டு தினம்
ADDED : ஆக 29, 2024 02:47 AM

ஊட்டி: நம் தேசிய விளையாட்டான ஹாக்கியின் ஜாம்பாவான், மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளான இன்று, (29ம் தேதி) தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், உடல்; விளையாட்டு மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், மலை மாவட்டமான நீலகிரியில் பல்வேறு விளையாட்டுகளில் 'சிகரம்' தொட்ட பலரின் அனுபவ பகிர்வு:
அன்பரசி, பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்தவர் அன்பரசி,27. இவர் கண் பார்வை குறைபாடு உள்ள நிலையிலும், செஸ் போட்டியில் சாதித்து வருகிறார். 'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்பட்ட செஸ் போட்டியில், குஜராத் அணியுடன் விளையாடி தங்கம் வென்று சாதித்துள்ளார். தனிநபர் விளையாட்டிலும் தங்கம் வென்றதுடன், தேசிய அளவிலான மூன்று போட்டிகளிலும், மாவட்ட மற்றும் மாநில அளவில், 15 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அன்பரசி கூறுகையில்,'சாதிக்கும் லட்சியம் வந்தால், உடல் குறைபாடு பொருட்டல்ல; விரைவில் நடக்கும் தேசிய போட்டியிலும் வெற்றி பெறுவேன்,'' என்றார்.
பிரியங்கா, குன்னுார்: குன்னுாரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜய். இவரின் மகள் பிரியங்கா,18, 'கோ கார்ட்டிங்' கார் பந்தயத்தில் பயிற்சி பெற்று சாதனை படைத்து வரும் இவர், கடந்த ஆண்டும், நடப்பாண்டும் எம்.ஆர்.எப்., 'கோவை மோட்டார் ஸ்பீட்வே' போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழக பெண் என்ற பெருமையை பெற்றார்.
சில நாட்களில், சென்னையில் நடக்கும் பார்முலா-4, கார் பந்தயத்தில்' அகுரா ரேசிங்' அணி சார்பில் பங்கேற்க உள்ளார். புகழ் பெற்ற தேசிய ரேசிங் சாம்பியன் சரோஷ் ஹட்டாரியா என்பவர் இவருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
பிரியங்கா கூறுகையில், 'தமிழகத்தில் கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் பெண் என்றாலும் அந்த பெருமை போதாது. உலக அளவில் சாதனை படைப்பதே தனது இலக்கு,'' என்றார்.
கோபி, ஊட்டி: குன்னுார் அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி,34, தேசிய ஹாக்கி பயிற்சியாளராக உள்ளார். இவர் கூறுகையில், 'ைஹ ஆல்டிடியூட் சென்டர் எனப்படும்,ஊட்டியில் ஹாக்கி பயிற்சி பெற்ற பலர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளனர். நான் இதுவரை, 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சி அளித்து, அவர்கள் தேசிய அளவில் ஹாக்கி போட்டிக்கு தேர்வாகி விளையாடியுள்ளனர்.
நான் பயிற்சியாளராக பணி புரியும், ஊட்டியில் உள்ள 'கிரசன்ட்' பள்ளியிலிருந்து மட்டும், 50 மாணவர்கள் மாநில, தேசிய அளவில் நடந்த போட்டியில் பங்கேற்றனர்.
விரைவில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 54 பேர் ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கின்றனர். அதில் எங்கள் பள்ளியில் இரு மாணவர்கள் உள்ளனர்,' என்றார்.
ராய்சன் - தேசிய தடகள வீரர்: ஊட்டியில் உள்ள அரசு மாணவர் விளையாட்டு விடுதியில் படிக்கும் மாணவர் ராய்சன்,19. இவர் பல தேசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அவர் கூறுகை யில், 'சென்னையில் உள்ள ஒரு கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறேன். நீளம் தாண்டுதல் தடகள போட்டியில் தேசிய அளவில் சட்டீஸ்கர், பாட்னாவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று தங்க வென்றேன். செப்., மாதம் ஈரோட்டில் நடக்கும் தடகள போட்டிக்கு தயாராகி வருகிறேன். பல தேசிய சாதனைகள் செய்ய வேண்டும் என்பது எனது லட்சியம்,' என்றார்.
யுவன் சங்கர் ராஜா , ஊட்டி: ஊட்டியில் உள்ள அரசு மாணவர் விளையாட்டு விடுதியில் படிக்கும் மாணவர் யுவன் சங்கர் ராஜா,17.
அவர் கூறுகையில், 'ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில், 12 ம் வகுப்பு படித்து வருகிறேன். தேசிய அளவில் நடந்த ஜூனியர் ரேஸ் வாக்கிங் தடகள போட்டியில் அசாம், சட்டீஸ்கர், பீகார், பாட்னா போன்ற இடங்களில் நடந்த போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளேன்.
இது வரை நடந்த போட்டிகளில் நான்காம் இடம் பிடித்துள்ளேன். தேசிய தடகள போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் வாங்க தயார்படுத்தி வருகிறேன். அடுத்த மாதம் ஈரோட்டில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளேன். '' என்றார்.
குமார், குன்னுார்: குன்னுாரை சேர்ந்த குமார், 52, ஸ்னூக்கர் விளையாட்டில் தேசிய நடுவராக உள்ளார். கடந்த, இரண்டு ஆண்டுகளாக, தமிழகம், மத்திய பிரதேசம் இந்துார், துபாய் ரியாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த, 40க்கும் மேற்பட்ட போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். விரைவில் நடக்க உள்ள சர்வதேச போட்டியிலும் நடுவராக பங்கேற்க உள்ளார். இவரது மகள் மரியம் ஆக்னஸ்; மகன் ஷாம் ஆல்வின் ஆகியோர் ஸ்னுாக்கர் விளையாட்டில் பல்வேறு தேசிய சாதனை படைத்து வருகின்றனர்.
மரியம் ஆக்னஸ், குன்னுார்: மரியம் ஆக்னஸ், 23. இவர், 2013ம் ஆண்டில் இருந்து பல்வேறு ஸ்னுாக்கர் போட்டிகளில் பங்கேற்று தங்கம்உட்பட, 30க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ளார். ரஷ்யா, பெல்ஜியத்தில் நடந்த, 3 சர்வதேச போட்டியில் பங்கேற்று உலக தர வரிசை பட்டியலில் இடம் பெற்றார்.
ஷாம் ஆல்வின், குன்னுார்: ஷாம் ஆல்வின்,16, ஸ்டேன்ஸ் பள்ளியில், 11ம் வகுப்பு பயில்கிறார். தேசிய போட்டியில், 8 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டு பெங்களூருவில் சர்வதேச போட்டியில் விளையாடி வருகின்றார்.
அசோக்குமார், குன்னுார்: குன்னுார் காந்திபுரத்தை சேர்ந்த சேர்ந்த சின்னச்சாமி ராஜலட்சுமி தம்பதியின் மகன் அசோக்குமார், 33. மாநில ஹாக்கி போட்டிகளில் பங்கேற்றஇவர், 2021ல் டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வீரர்களுடன், காணொளி, பகுத்தாய்வாளராக (வீடியோ அனலிஸ்ட்) முதன்முறையாக பணியாற்றினார். கடந்த 2023ம் ஆண்டு ஹாக்கி போட்டியில் இந்திய அணி வீரர்களுடன், காணொளி பகுப்பாய்வாளராக பணியாற்றினார்.
அசோக்குமார் கூறுகையில், ''நீலகிரியின் சீதோஷ்ண நிலையில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அமைத்து உலக போட்டிகளில் வீரர்களை பங்கேற்க செய்ய வேண்டும்,'' என்றார்.
அஸ்வந்த், பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடுபகுதியைச் சேர்ந்தவர் கல்லுாரி மாணவர் அஸ்வந்த்-, 17. இவர் தேசிய அளவில், பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்று சாதித்துள்ளார்.
தமிழகம் மற்றும் கேரளா முதல்வர் கோப்பைக்கான போட்டிகள், கேரளா பிரிமியர் லீக் போட்டி மற்றும் திருச்சூர் அணிக்காகவும் விளையாடி சாதித்து உள்ளார். கடந்த ஆண்டு அந்தமானில் நடந்த தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் கேப்டனாக இருந்து விளையாடி பாராட்டை பெற்றார்.
இவரின் தம்பி விஷ்ணு 16. ஒடிசா மாநிலத்தில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தமிழக அணிக்காக விளையாடியதுடன், அணி யின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
முகமது பாயிஸ், கூடலுார்: ----கூடலுார், தேவர்சோலை மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்- 1படித்து வரும் முகமது பாயிஸ், 16, பள்ளிகளுக்கான தேசிய விளை யாட்டு குழுமம்நடத்திய, 67வது தேசிய அளவிலான, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், தமிழக அணிக்காக விளையாடினார்.
முகமது பாயிஸ் கூறியதாவது, 'படிப்புடன், கால்பந்து மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதன் காரணமாக தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்திய கால்பந்து அணியில் விளையாட வேண்டும்; அதற்காக தொடர்ந்து முயற்சிப்பேன்,'' என்றார்.