ADDED : ஜூன் 04, 2024 12:09 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே ஆற்றை ஒட்டி கழிவுகள் கொட்டிய லாரி சிறை பிடிக்கப்பட்டது.
பந்தலுார் சேரம்பாடி அருகே சப்பந்தோடு செல்லும் சாலையில், ஆற்றை ஒட்டிய பகுதியில் இரவில் கழிவுகள் கொட்டிய லாரியை மக்கள் சிறை பிடித்தனர். அதனை நேற்று காலை சேரம்பாடி போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்ய இயலாது என தெரிவித்து வனத்துறைக்கு அனுப்பினர். தொடர்ந்து, சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்திடம், லாரி மற்றும் அந்த செயலில் ஈடுபட்ட நபர்களை வனத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நிலையில், 'அதனை கட்ட முடியாது,' என, லாரியில் இருந்தவர்கள் கூறியதால், வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் லாரி ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, கடலுாரை சேர்ந்த டாங்கர் லாரி உரிமையாளர் சக்ரவர்த்தியிடம் விசாரணை நடந்து வருகிறது.