/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெல்ஸ்புரம் பகுதியில் வீடுகளுக்குள் தேங்கும் கழிவுநீர்: மக்கள் அவதி
/
வெல்ஸ்புரம் பகுதியில் வீடுகளுக்குள் தேங்கும் கழிவுநீர்: மக்கள் அவதி
வெல்ஸ்புரம் பகுதியில் வீடுகளுக்குள் தேங்கும் கழிவுநீர்: மக்கள் அவதி
வெல்ஸ்புரம் பகுதியில் வீடுகளுக்குள் தேங்கும் கழிவுநீர்: மக்கள் அவதி
ADDED : மே 24, 2024 11:03 PM

மேட்டுப்பாளையம் : வெல்ஸ்புரம் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர், மழை காலத்தில் வீடுகளின் உள்ளே செல்வதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
காரமடை தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, ஐந்தாவது வார்டு வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் கழிவு நீர், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் அமைந்துள்ள, மழை நீர் வடிகாலுக்கு வந்தடைகிறது.
கோவை மாநகராட்சி பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு, குழாய் பதிக்க குழி தோண்டிய போது குவித்த மண், மழைநீர் வடிகாலை மூடியது. குழாய் பதித்த பின், இந்த மண்ணை அகற்றாததால், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
மழை காலத்தில், மழைநீரும், கழிவுநீரும் செல்ல மழைநீர் வடிகால் இல்லாததால், சாலையின் ஓரத்தில் உள்ள வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து வெல்ஸ்புரம் மக்கள் கூறுகையில், ''வெல்ஸ்புரம் பகுதியில், மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்றன. பின்பு என்ன காரணத்தினாலோ பணிகள் பாதியிலேயே நின்றன. தேக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால் அமைத்து, கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
இதுகுறித்து தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் நித்யா நந்தகுமார் கூறுகையில், ''வெல்ஸ்புரத்திலிருந்து வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளம் வரை, மழைநீர் வடிகால் கட்ட டெண்டர் எடுத்தவர் இறந்து விட்டார்.
அதனால் பணிகள் கடந்த சில மாதங்களாக தடைப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பின், ஜூன் மாதம் இப்பகுதியில் மழை நீர் வடிகால், புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

