/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் குழந்தைகளுக்கான மாநில விருது அறிவிப்பு
/
பெண் குழந்தைகளுக்கான மாநில விருது அறிவிப்பு
ADDED : ஆக 17, 2024 12:59 AM
ஊட்டி;பெண் குழந்தைகளுக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநில அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், தொழிலாளர் முறையை ஒழிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்த, 13 வயதுக்கு மேல், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்டுதோறும், ஜன., 24ம் தேதியன்று தேசிய பெண் குழந்தை தினத்தில், பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை வழங்கப்படும்.
தகுதிகள்:
தான் மட்டுமல்லாமல், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதுடன், பெண் தொழிலாளர் முறையை ஒழித்து, பெண் குழந்தை திருமணத்தை தடுப்பது, வேறு ஏதாவது வகையில், சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு, ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக, விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை, பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை உறுதி செய்து இருக்க வேண்டும்.
தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையத்தில், 30ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையத்தளத்தில் பதிவு செய்தபின், அனைத்து ஆவணங்களையும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், தமிழ், ஆங்கிலம் என தலா, இரண்டு நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.