/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகிழம் மரத்தை விழ வைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம் ரயில்வே போலீசார் முன்னிலையில் தடுப்புச்சுவர் அமைக்க ஒப்புதல் தினமலர் செய்தி எதிரொலி
/
மகிழம் மரத்தை விழ வைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம் ரயில்வே போலீசார் முன்னிலையில் தடுப்புச்சுவர் அமைக்க ஒப்புதல் தினமலர் செய்தி எதிரொலி
மகிழம் மரத்தை விழ வைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம் ரயில்வே போலீசார் முன்னிலையில் தடுப்புச்சுவர் அமைக்க ஒப்புதல் தினமலர் செய்தி எதிரொலி
மகிழம் மரத்தை விழ வைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம் ரயில்வே போலீசார் முன்னிலையில் தடுப்புச்சுவர் அமைக்க ஒப்புதல் தினமலர் செய்தி எதிரொலி
ADDED : செப் 02, 2024 02:24 AM

குன்னுார்;குன்னுாரில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த மகிழம் மரத்தின் வேரை அகற்றி, விழ வைக்கும் முயற்சி, சமூக ஆர்வலர்களின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.
குன்னுார் ரயில் நிலையத்தில், 6.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 'யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலை பாரம்பரியம் மாறாமல் பொலிவுபடுத்த வேண்டும்,' என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ரயில்வே பொதுப்பணி துறை அதிகாரிகள் உடந்தையுடன், ரயில் நிலைய முன்புறம் உள்ள, பறவைகளின் வாழ்விடமான, நுாற்றாண்டு பழமை வாய்ந்த மகிழம் மரத்தை விழ வைக்க, ஒப்பந்ததாரர்களால் சுற்றிலும் மண் தோண்டப்பட்டு, வேர்கள் வெட்டப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, ஆர்.டி.ஓ.,விடம் மரம் விழும் நிலையில் உள்ளது எனக்கூறி மரத்தை வெட்ட அனுமதி பெறப்பட்டது.
வெட்டப்பட்ட வேர்கள்
நல்ல நிலையில் உள்ள இந்த மரத்தை வெட்டி அகற்ற, எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின் பேரில், ஆய்வு நடத்திய வனத்துறையினர், மரத்தை வெட்டுவதற்கு தடை விதித்து, சுற்றியும் கருப்பு நிற மண் கொட்டி தடுப்பு சுவர் எழுப்பி பாதுகாக்க உத்தரவிட்டனர்.
எனினும், வனத்துறை உத்தரவுகளை மீறி, மரத்தை விழ வைப்பதற்காக, பொக்லைன் பயன்படுத்தி மீண்டும் மண் தோண்டப்பட்டு, மரத்தின் வேர் பகுதியையும் சிறிது, சிறிதாக வெட்டி வந்தனர்.
சமூக ஆர்வலர்கள் போராட்டம்
இதனை அறிந்த சமூக ஆர்வலர்களான, கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார், தன்னார்வ கூட்டமைப்பு கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று, 'மரத்தை அழிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது,' என, தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர்.
ஆனால், ரயில்வே பொதுப் பணித்துறை பொறியாளர் உரிய பதில் அளிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, ரயில்வே போலீசார் முன்னிலையில் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து பொறியாளர் சிவலிங்கம் ஒப்புகொண்டார்.
'மீண்டும் 'சர்வே' செய்யப்பட்டு, 10 அடி அளவிற்கு இடம் விட்டு தடுப்புச் சுவர் எழுப்பி மரம் பாதுகாக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது. மரம் வெட்டும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
'மீண்டும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் அறப்போராட்டம் நடத்தி, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்யப்படும்,' என, தன்னார்வலர்கள் கூறியுள்ளனர்.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், ''ஏற்கனவே இங்கு ஆய்வு மேற்கொண்ட ரயில்வே வாரிய (ஹெரிடேஜ்) செயல் இயக்குனர்ஆஷிமா மெஹரோத்ரா இந்த மரத்தை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளார்.
எனினும் மரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தவிர்த்து விட்டு, மரத்தின் அடி வேரை பிடுங்கி வருவது கண்டிக்கத்தக்கது.
ரயில்வே அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.