/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரள நிவாரண முகாம்களில் தமிழக மருத்துவ குழுவினர்
/
கேரள நிவாரண முகாம்களில் தமிழக மருத்துவ குழுவினர்
ADDED : ஆக 02, 2024 05:38 AM

பந்தலுார் : கேரள நிவாரண முகாம்களில் தமிழக மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், முண்டக்கை மற்றும் சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், ஏராளமான கடைகளும் இருந்த இடம் தெரியாமல் போய் உள்ளது.
குடியிருப்புகளில் உயிருடன் இருந்து மீட்கப்பட்ட, 8,000க்கும் மேற்பட்டோர், 83 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு அரசு துறை மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகம்- கேரளா- கர்நாடகா பகுதியில் இருந்து நிவாரண பொருட்கள் தினசரி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறையினர் இப்பகுதி முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்ட மருத்துவ சுகாதாரத் துறை இணை இயக்குனர் பாலுசாமி மேற்பார்வையில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முகாம்களில் தங்கியிருந்து, 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.