/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி! எழுத்தறிவித்த இறைவனை வணங்குவோம்
/
ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி! எழுத்தறிவித்த இறைவனை வணங்குவோம்
ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி! எழுத்தறிவித்த இறைவனை வணங்குவோம்
ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி! எழுத்தறிவித்த இறைவனை வணங்குவோம்
ADDED : செப் 04, 2024 11:16 PM

ஊட்டி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் அவர் பெயரில், மத்திய அரசு, தேசிய நல்லாசிரியர் விருது; மாநில அரசு நல்லாசிரியர் விருதும் வழங்குகின்றன. நம் நாட்டை வல்லரசு நாடாக மாற்றும் இளையோரை உருவாக்கும் சிற்பிகள் அவர்கள்.
யாருக்கும் கிடைக்காத தெய்வீக பணியை திறம்பட செய்து, மத்திய, மாநில அரசின் விருதுகளை பெற்ற, சில ஆசான்களின் சமூக சிந்தனை கருத்துக்கள் இதோ...
செந்தில்குமாரி, மாநில நல்லாசிரியர் விருது, கூடலுார்:
மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பதன் மூலம், பொது அறிவை மேம்படுத்தி தங்களை சிறந்த எழுத்தாளர்களாக, படைப்பாளர்களாக உருவாக்கி கொள்ள முடியும். சமூக வளைதளங்களின் வளர்ச்சியால், எழுத்தாளர்கள் குறைந்து வருகின்றனர். நுாலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வதுடன், நுாலகங்களுக்கு புத்தகங்களை வழங்கவும் முன் வர வேண்டும். கற்றல் மூலமே மொழித்திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.
புஷ்பா, மாநில நல்லாசிரியர் விருது, சோகத்தொரை:
ஆசிரியர் தினம் ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல, ஆண்டுதோறும் ஆசிரியர்கள் நினைவு கூறும் தினங்களாக இருக்க வேண்டும். குழந்தைகளை கொண்டு ஆசிரியர் தினம் கொண்டாட வைக்க வேண்டும். ஆசிரியர்களின் பணி வருங்கால சிறந்த தலைமுறையினரை உருவாக்க முக்கிய காரணமாக உள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
சபிதா, மாநில நல்லாசிரியர் விருது, குந்தா கேம்ப்:
இன்றைய சூழலில் மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்ப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆசிரியர்களின் நல்வழி காட்டுதல் மூலமாக மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை மேம்பட உதவும். எனது, 12 ஆண்டு கால ஆசிரியர் பணியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் எண்ணத்தோடு பணிபுரிந்து வருகிறேன். தனியார் பள்ளிக்கு இணையாக எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் ஒழுக்கத்திலும், படிப்பிலும் திகழ்ந்து வருகின்றனர்.
கீதா, மாநில நல்லாசிரியர் விருது, பெட்டட்டி:
ஆசிரியர் பணியே ஓர் அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்பார்கள். ஒரு மாணவன் வீட்டிலிருக்கும் நேரத்தை விட, பள்ளியில் இருக்கும் நேரம் தான் அதிகம். ஒரு நல்ல மனிதனை உருவாக்குவது ஒரு ஆசிரியரின் கையில் தான் உள்ளது. ஆசிரியர்கள் நினைத்தால் கல்லையும் கல்வி கற்க வைக்க முடியும். எனது, 16 ஆண்டு கால ஆசிரியர் பணியில் மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, கற்பித்தல் முதல் நான் ஆற்றிய பல நல்ல திட்ட பணிக்காக மாநில நல்லாசிரியர் விருது கிடைத்தது.
மீரா, மாநில நல்லாசிரியர் விருது, பந்தலுார்:
இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கல்வி முடித்த அனைத்து மாணவர்களையும், கல்லுாரி படிப்பில் சேர்த்து படிக்க ஊக்கமளித்துள்ளார்.
மேலும், பொது தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, ஊக்கம் கொடுத்து மீண்டும் தேர்வு எழுத செய்து, அவர்களை கல்லுாரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்க காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக. பழங்குடியின மாணவர்களுக்கு, ஊக்கம் கொடுத்து மேல் வகுப்பு படிக்க செய்துள்ளார். இத்தகைய சிறந்த பணிகளுக்காக, மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கியது.
சமுத்திரபாண்டியன், மாநில நல்லாசிரியர் விருது, பந்தலுார்:
தற்போது கல்வியில் பல்வேறு நவீன மாற்றங்கள் உருவாகி உள்ளது. ஏட்டுக்கல்வி என்பது மாறி தற்போது ஆன்லைன் கல்வி என மாறி உள்ள நிலையில், மாணவர்கள் கல்வி கற்பதற்கு மட்டுமே இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கான மரியாதை செலுத்துவதில் மாணவர்கள் எப்போதும், ஒரே நிலையில் இருக்க வேண்டும். பழங்குடியினர் கல்வியில் ஏற்றம் காண வேண்டுமானால், பழங்குடியினர் மொழியில் பேசி கல்வி போதிக்கும் ஒரு நல்ல வழிகாட்டியை, ஒவ்வொரு பழங்குடியின சமுதாயத்திலும் உருவாக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
--முருகேசன், மாநில நல்லாசிரியர் விருது, பென்னை:
இரண்டு இடங்கள் மட்டுமே புனிதமான இடங்களாக கருதப்படும். ஒன்று தாயின் கருவறையும் மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறையும் ஆகும். தாயின் கருவறையில் உயிரை பெறும் ஒரு மனிதன், வகுப்பறையில் அறிவை பெறுகிறார். புனிதமான ஆசிரியர் பணியில், அனைவரும் சமூகத்தை மேம்படுத்தும் ஆசிரியர்களாக பணியாற்ற முன் வரவேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சிறந்த மனிதனாக உருவாக்கும் வகையில் ஆசிரியர்களிடம் கை கோர்க்க வேண்டும்.
கபூர்(ஓய்வு) மாநில நல்லாசிரியர் விருது, கூடலுார்:
ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியுடன், அவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தை தெரிந்து கொண்டு அதனை ஊக்கப்படுத்தி உதவ வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள், அதற்கான போட்டி தேர்வுகளுக்கு எப்படி தயாராகுவது; எதிர்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள்; அதற்கு என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். ஆசிரியரின் நல்வழி காட்டுதல், எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்க்கை மேம்படுத்த உதவும்.
நஞ்சுண்டன், மாநில நல்லாசிரியர் விருது, ஒரசோலை:
படிப்பறிவு இல்லாமல் இருந்த பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தது; பள்ளி -சமுதாயம் இடையே, உறவை பேணியதுடன், நன்கொடை பெற்று பள்ளி கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்தி, மாதிரி பள்ளியாக மாற்றியது; தன்னார்வ அமைப்புகள் குறிப்பாக 'வேர்ல்ட் விஷன் இந்தியா' உதவியுடன், பள்ளி சுற்றுச்சூழலை மேம்படுத்தியதற்காக, 2009ல் விருது கிடைத்தது.
மனோகரன் (ஓய்வு) மாநில நல்லாசிரியர் விருது, கோடேரி:
இன்றைய சமூகச்சூழலில் மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. ஊடகங்கள், போதை கலாசாரம், கைபேசி போன்றவை மாணவர்களை விழுங்கிவிட துடிக் கின்றன. பெற்றோர் செய்வதறியாது திகைக்கின்றனர். ஆசிரியர்கள் மட்டுமே நம்பிக்கை ஊட்டும் ஆத்மாக்கள். தாயுள்ளத்தோடு அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறப்பணியில் தம்மை அர்ப்பணித்து வரும் ஆசிரியர்களை கொண்டாடுவோம்.
ஏகாம்பரம் (ஓய்வு) தேசிய நல்லாசிரியர் விருது, சேரம்பாடி:
-ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தை நேசிப்பதை விட, தன்னிடம் படிக்கும் மாணவர்களை அதிகமாக நேசிக்கும் குணம் கொண்டவர்கள். கடந்த காலங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிப்புடன் நடத்தியதாலும், அதனை பெற்றோர், சமூகம் ஏற்று கொண்டதாலும், பல சிறந்த மாணவர்களை உருவாக்க முடிந்தது.
தற்போது, அந்த நிலை மாறி உள்ளதால் மாணவர்களை கண்டித்தால் புகார் செய்யும் நிலை உள்ளது. சில மாணவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் நிலைக்கு சிலர் தள்ளப்பட்டு வருகின்றனர். அந்த நிலை மாறி, மாணவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும், வாழ்வில் உயர்வான இடத்திற்கு செல்பவர்களாகவும் மாற தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
கலாவதி(ஓய்வு) தேசிய நல்லாசிரியர் விருது, குன்னுார்:
-மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுவதில், கல்வி மட்டுமே என்றும் துணை புரியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். படிக்கும் வயதில் ஒழுக்கம் மற்றும் படிப்பில் நாட்டம் செலுத்தும் நபர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் என்றும் மாணவர்களின், வாழ்க்கையை மேம்படுத்துபவர்களாக பணியாற்றி வரும் நிலையில், அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தங்கள் குடும்பத்தை, சமூகத்தை காப்பாற்றும் நல்ல குடிமகனாக திகழ வேண்டும்.
லட்சுமி நாராயணன் (ஓய்வு), மாநில நல்லாசிரியர் விருது, தாம்பட்டி:
நான்கு சுவர்களுக்குள் உள்ள வகுப்பறை தான் நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யும். எப்படிப்பட்ட கற்களாக இருந்தாலும் அழகான சிலையை செதுக்கும் சிற்பியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள்.
எத்தகைய குழந்தையையும் கல்வியால் செதுக்கி நாட்டின் உயர் பதவிக்கு கொண்டு வரும் அற்புதமான ஆசிரியர்களை தொழிலாளர், நடிகர், பிரதமர் உட்பட அனைவரும் போற்றுகின்றனர்.
லட்சத்தில் ஒரு சிலர் தவறு செய்வது ஆசிரியர்களின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தினாலும், நல்ல சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் பெருமையை இந்நாளில் போற்றுவோம்.