/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மலை ரயில் பாரம்பரியம் மாறாமல் மேம்படுத்தப்படும் ரயில்வே வாரிய செயல் இயக்குனர் உறுதி
/
நீலகிரி மலை ரயில் பாரம்பரியம் மாறாமல் மேம்படுத்தப்படும் ரயில்வே வாரிய செயல் இயக்குனர் உறுதி
நீலகிரி மலை ரயில் பாரம்பரியம் மாறாமல் மேம்படுத்தப்படும் ரயில்வே வாரிய செயல் இயக்குனர் உறுதி
நீலகிரி மலை ரயில் பாரம்பரியம் மாறாமல் மேம்படுத்தப்படும் ரயில்வே வாரிய செயல் இயக்குனர் உறுதி
ADDED : ஆக 18, 2024 12:51 AM

குன்னுார்:''நூற்றாண்டு பழமையான நீலகிரி மலை ரயில் பாரம்பரியம் மாறாமல் படிப்படியாக மேம்படுத்தப்படும்,'' என, ரயில்வே வாரிய (ஹெரிடேஜ்) செயல் இயக்குனர் ஆஷிமா மெஹரோத்ரா உறுதி அளித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி -- குன்னுார் -- மேட்டுப்பாளையம் இடையே, 125 ஆண்டுகளாக இயக்கப்படும், நீலகிரி மலை ரயிலுக்கு கடந்த, 2005ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைத்தது.
சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும், சிறப்பு பெற்ற இந்த பாரம்பரிய மலை ரயிலை, டில்லியில் இருந்து வருகை தந்த ரயில்வே வாரிய (ஹெரிடேஜ்) செயல் இயக்குனர் ஆஷிமா மெஹரோத்ரா ஆய்வு மேற்கொண்டார். அனைத்து ரயில் நிலையங்கள், குகைகள், பணிமனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, அதன் விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஊட்டியில் நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமையில் அதன் குழுவினர், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, இயங்கும் நிலையில் உள்ள, 37384 எண் கொண்ட நிலக்கரி இன்ஜினை முழுமையாக பராமரித்து இயக்குவது; ரன்னிமேடு ரயில் நிலையம் மீண்டும் திறப்பது; புதிய நிலக்கரி இன்ஜின் இயக்குவது; உள்ளூர் மக்கள், மாணவர்களுக்கு ரயிலில் செல்ல வழி வகுப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
ரயில்வே வாரிய (ஹெரிடேஜ்) செயல் இயக்குனர் ஆஷிமா மெஹரோத்ரா நிருபர்களிடம் கூறுகையில், ''யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழமையான நீலகிரி மலை ரயில் பாரம்பரியம் மாறாமல் பாதுகாத்து, மேம்படுத்தப்படும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், ரயில்வே வாரிய (ஹெரிடேஜ்) துணை இயக்குனர் ராஜேஷ் குமார், முதுநிலை கோட்ட பொறியாளர் சதீஷ் சரவணன், நீலகிரி (ஹெரிடேஜ்) உதவி இயக்குனர் முருகேசன், சீனியர் இன்ஜினியர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.