/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட குட்டி யானை கண்காணிக்கும் பணியில் வனத்துறை
/
கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட குட்டி யானை கண்காணிக்கும் பணியில் வனத்துறை
கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட குட்டி யானை கண்காணிக்கும் பணியில் வனத்துறை
கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட குட்டி யானை கண்காணிக்கும் பணியில் வனத்துறை
ADDED : ஆக 14, 2024 12:33 AM

கூடலுார்:'முதுமலை மசினகுடி அருகே, தனியாக தவித்த குட்டி யானையை கூட்டத்தில் சேர்த்து கண்காணித்து வருகிறோம்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டம், மசினகுடி-மாயார் சாலையோர வனத்தில் நேற்று முன்தினம் தாயை பிரிந்த பெண் குட்டி யானை தனியாக தவித்து கொண்டிருந்தது.
மசினகுடி வனச்சரகர் பாலாஜி மற்றும் வன ஊழியர்கள் அதனை கண்காணித்து, 'டிரோன்' கேமரா மூலம் யானை கூட்டத்தை கண்டு பிடித்து, அதனுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சூசுரமட்டம் பகுதியில் இரு யானை கூட்டங்கள் அருகே, குட்டி யானை விடப்பட்டது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் பாலாஜி மற்றும் வன ஊழியர்கள் யானை கூட்டத்தை, 'டிரோன்' கேமரா மூலம் கண்காணித்தனர்.
அதில், ஒரு கூட்டத்தில், குட்டி யானை இணைந்திருப்பது தெரியவந்தது. மற்றொரு யானை கூட்டத்திலும், அதே போன்று குட்டி யானை இருப்பதால், கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தனியாக பிரிந்து தவித்த குட்டி யானை, சூசுரமட்டம் பகுதியில் யானை கூட்டத்தில் சேர்ந்துள்ளது.
எனினும், தாயுடன் உள்ள குட்டி யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.