/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை பலி
/
கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை பலி
ADDED : மே 23, 2024 01:59 AM

பாலக்காடு: பாலக்காடு அருகே, கம்பி வேலியில் சிக்கி நான்கு வயது பெண் சிறுத்தை இறந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ளது வாழப்புழை. வன எல்லையோர பகுதியான இங்கு விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன.
இந்நிலையில், நேற்று அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணனின் தென்னைமர தோப்பில் அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிறுத்தை சிக்கிக் கொண்டுள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதுபற்றி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
பல மணி நேரம் போராடியும் கம்பி வேலியில் இருந்து தப்பிக்க முடியாமல் சிறுத்தை தவித்தது. இந்நிலையில், மதியம், 12:30 மணிக்கு, வனத்துறையின் தலைமை கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தலைமையிலான குழு, மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையை மீட்டு கூண்டில் அடைத்தது. கூண்டில் ஆக்ரோஷமாக இருந்த சிறுத்தையின் உடல்நிலையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென உடல் நிலை பாதித்து சிறுத்தை இறந்தது.
இதுகுறித்து, தலைமை கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் கூறுகையில், ''இறந்தது நான்கு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை. கம்பிவேலியில் சிக்கியதால் உடல் உட்புற உறுப்புகளில் ஏற்பட்ட காயம் காரணமாக பலியாகி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின், சிறுத்தையின் உடல் வனத்தில் அடக்கம் செய்யப்படும்,'' என்றார்.
அதேநேரத்தில், ஆரோக்கியமாகவும், உடலில் பெரும் காயங்கள் இன்றி இருந்த சிறுத்தை இறப்புக்கு, மருத்துவர் செலுத்தியமயக்க ஊசி தான் காரணம் என, தன்னார்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

