/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலச்சரிவில் உயிர்களை காப்பாற்றிய மருத்துவ குழு
/
நிலச்சரிவில் உயிர்களை காப்பாற்றிய மருத்துவ குழு
ADDED : ஆக 14, 2024 12:26 AM

பந்தலுார்:கேரளா மாநிலம், வயநாடு நிலச்சரிவில் பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு, உயிர் பிழைத்த பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தின் போது, பல்வேறு மருத்துவ குழுவினரும் அங்கு முகாமிட்டு, உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலுார் பகுதியில் இருந்து, 'சிஹாப் தங்கள்' மனிதநேய மருத்துவ குழுவினர் சம்பவம் நடந்தவுடன் அங்கு சென்று சிகிச்சை அளிக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக, ஆம்புலன்சில் செவிலியர்கள் பிந்து மற்றும் சிந்தியா, டிரைவர் பாபு ஆகியோர் அங்கு சென்று, 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். அதில், 60 வயது மூதாட்டி ஒருவரை சூரல்மலை பகுதியில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மூதாட்டி உயிரிழந்து விட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்த நிலையில், பரிசோதனை செய்த டாக்டர், தொடர் சிகிச்சை அளித்ததன் பேரில் தற்போது அவர் உயிருடன் உள்ளார்.
செவிலியர் சிந்தியா மற்றும் பிந்து கூறுகையில்,''ஐந்து நாட்கள் அந்த பகுதியில் தங்கி, முதலுதவி சிகிச்சை மையம் மூலம் ராணுவத்தினர் மற்றும் மீட்பு குழுவினர் என அனைத்து தரப்பினருக்கும் சிகிச்சை அளித்தோம். மனிதநேயத்துடன் பல உயிர்களை காப்பாற்றிய ஆறுதல் மட்டும் மன நிறைவை தந்தது,'' என்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய பலருக்கும், அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த இவர்கள் மூவரையும் யாரும் கண்டு கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது. எனினும், இவர்களால் உயிர் பிழைத்தவர்கள் மூவரையும் வாழ்த்தி நன்றி தெரித்து வருகின்றனர்,' என்றனர்.